Sunday, 12 July 2015

வியர்வை நாற்றத்தை போக்க வழிகள்

வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும் முகத்தைச் சுத்தமான துணியால் துடைத்துவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.


 
* வெயிலால் முகத்தில் படரும் கருமையைப் போக்க, 2 டீஸ்பூன் தயிரில் சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
 
* நிழலில் காயவைத்த ஆவாரம் பூவுடன் சம அளவு பயத்தமாவைச் சேர்த்துத் தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கும்.
 
* பச்சைப் பயறுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து, அதைத் தண்ணீரில் குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம், வியர்க்குரு, உடலில் உப்பு பூத்தல் போன்றவை நீங்கும்.
 
* இளநீர் அல்லது தண்ணீருடன் வெந்தயப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
 
* 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியுடன் அரைக் கப் தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். 

Thursday, 2 July 2015

நீர் மருத்துவம்!

"பொதுவாக ஒருவருக்கு எந்த ஒரு நோயும் திடீரென்று வருவதில்லை. அந்நோய் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல் விடும்பொழுதுதான் அது நாளடைவில் பெரிய நோயாக மாறுகிறது. இவை போன்ற அறிகுறிகள் யாருக்காவது இருந்தால் அதிலிருந்து விடுபடுவது எப்படி? வராமல் தடுத்து தற்காத்து கொள்வது எப்படி? என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, "ஹைட்ரோ தெரபி' என்னும் நீர் மருத்துவப் பயிற்சி முறைகள் மூலம் நாங்கள் தீர்வு தருகிறோம்'' என்கிறார் அனுப்ரியா. இவர் இந்தியாவின் முதல் ஹைட்ரோ தெரபிஸ்ட்டும் கூட. சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது அட்டோஸ் லியோ வெல்நஸ் சென்டரில் இவரைச் சந்தித்தோம்:


""பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்கிற கருப்பை நீர்க்கட்டிகள், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, மூட்டுவலி, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, பாத வலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஹைட்ரோ தெரபி மூலம் நிவாரணம் தருகிறோம். ஹைட்ரோ தெரபி என்பது தண்ணீரை உட்புறமாகவோ, வெளிப்புறமாகவோ பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மருத்துவ முறை. ஹைட்ரோ தெரபியில் 5 நிலைகள் உண்டு. அது தண்ணீர், காற்று, ஆரோக்ய உணவு முறை, உடற் பயிற்சிகள், மூலிகைகள். இவற்றில் முறையாக பயிற்சி அளிக்கிறோம்.
நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துவதும், குளிப்பதும் கூட ஹைட்ரோ தெரபியில் ஒரு பயிற்சிமுறைதான். உதாரணத்திற்கு குறைந்தது 20 நிமிடமாவது குளிர்ந்த நீரில் ஒரு வாரம் குளித்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தெரியும். காரணம் குளிர்ந்த நீரில் 20 நிமிடம் குளிக்கும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. அதுபோல கண்டிப்பாக வெந்நீர்தான் குடிக்க வேண்டும். அதுபோல மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் வாட்டர் ஸ்டெப்பிங் செய்யலாம். அதாவது அந்தக் காலத்தில் பானை செய்பவர் மண்ணை மிதிப்பது போல டப்பிலேயே நடந்து கொண்டிருப்பது. இதன் நன்மையை உணர்ந்துவிட்டாலே யாரும் இதை மறுக்கமாட்டார்கள்.
ஜெர்மனியில் உள்ள செபாஸ்டின் நீப் என்பவர்தான் இந்த ஹைட்ரோ தெரபியைக் கண்டுபிடித்தவர். உலகிலேயே ஜெர்மனியில் மட்டும்தான் "செபாஸ்ட்டின் ஸ்கூல் ஆப் ஹைட்ரோ தெரபி' என்ற பயிற்சிக் கூடம் இருக்கிறது. இதைத் தவிர இந்த பயிற்சிக் கூடத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் சிலர் சிங்கப்பூர் சென்று பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்.
எனக்கு இதில் நாட்டம் வந்தது எப்படி என்றால் நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அதுவரை நல்ல உடல் கட்டுடன், ஆரோக்யமாக இருந்த என் தந்தை திடீரென்று எதிர்பாராதவிதமாக ஒரு மலைக் கோயில் படியில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது பிரஷர் அதிகமாகி இறந்து விட்டார். அந்த பாதிப்பு என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பி.இ. படித்து, விருப்பமில்லாமலே ஓர் ஐ.டி நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். அந்த நேரத்தில் என் அக்காவின் கணவர் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலையில் இருந்தார். அவர் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று அலைந்து கொண்டிருந்ததில் திடீரென்று முதுகு தண்டுவடமும், இடுப்பும் இணையும் இடத்தில் ஜவ்வு குறைந்து எலும்பு விலகிவிட்டது. இதனால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அந்த சமயத்தில் அவர் இந்த ஹைட்ரோ தெரபியைக் கேள்விப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு அந்த பிரச்னையில் இருந்து நல்ல தீர்வு கிடைத்தது.
அதன் பிறகு இவ்வளவு பயனுள்ள ஹைட்ரோ தெரபியை மற்றவர்களும் பயன்பெறும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. இதற்காக சிங்கப்பூர் சென்று இந்த ஹைட்ரோ தெரபியை படித்துவிட்டு வந்தேன்.
2011 -இல் இந்த மையத்தை ஆரம்பித்தோம். பொதுவாக பெண்களுக்கு அதிகமாக மன உளைச்சல் இருக்கும். ஆனால் அதை அவர்களுக்கு வெளியே சொல்லக் கூட தெரியாது. அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் எனக்குப் பழக்கமில்லை என்பார்கள். அவர்கள் எந்த கூச்சமோ, பயமோ இல்லாமல் எங்களிடம் பயிற்சி எடுத்து கொள்ள வருகிறார்கள். காரணம் இது முழுக்க முழுக்க தண்ணீர் கொண்டு செய்யும் பயிற்சி முறை என்பதால் யாரும் பயப்படுவதில்லை. இதில் பக்க விளைவுகளும் இல்லை.
மே மாதத்தில் ஹைபர் டென்ஷன் தினம் மற்றும் ஆர்த்தெரடிக் கேர் மாதம் (எலும்பு மற்றும் வாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு மாதம்) அதற்காக நாங்கள் மே மற்றும் ஜுன் மாதம் வரை இலவச கன்சல்டிங் கொடுக்கிறோம்.
உடல்வலி, தசை வலி, தசைபிடிப்பு, மூட்டுவலி, உடல் பருமன், மூட்டு வாத பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கருப்பையில் நீர்கட்டிகள் உள்ளவர்கள், தூக்கமின்மை, மலச்சிக்கல், பசியின்மை,மன அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், வெரிகோஸ் வெயின் பிரச்னை 2 ஸ்டேஜுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச கன்சல்டிங்கை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே அலோபதி மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் இந்த நீர் மருத்துவத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகலாம்.
எங்கள் தெரபியில் சிறுதானியங்களையும், மூலிகைகளையும் உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதையும் சொல்லித் தருகிறோம். பொதுவாக வல்லாரையோ, தூதுவளையோ சமைத்து கொடுத்தால் குழந்தைகள் தவிர்ப்பார்கள். ஆனால் சாம்பார், ரசம் போன்றவற்றில் தினம் 10 இலைகள் போட்டு சமைத்து வந்தாலே போதும் அதன் சாறு நமது உடம்பில் சேரும்.இவை அனைத்தையும் ஒரு குடும்ப தலைவிதான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரிந்துகொண்டால் அந்த குடும்பமே பயன் அடையும் '' என்றார்.