Tuesday 28 April 2020

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது

விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது. 
பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு. 

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்... 

* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 

* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும். 

* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 

* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும். 

* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...

Wednesday 15 April 2020

உருவ வழிபாடு

உருவ வழிபாடுபூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது.

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.

கற்றதை மற; சும்மா இரு!

கற்றதை மற; சும்மா இரு!
- 
தேதியூர் பாலு

ஜெர்மானிய வேதாந்தி பால் தேவ் ஸேன் சொல்கிறார்...

""நமக்கு எதிர்காலத்தைக் காணும் திறமை இல்லை. இடைவிடாது ஆராயும் மனிதனுடைய மனக்கண் முன் இன்னும் என்னென்ன அதிசயங் கள், என்னென்ன தெய்வீகக் காட்சி கள் தோன்றப் போகின்றன என்பதை நாம் கூற முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூறலாம். எந்தப் புதிய வழிகளை எதிர்காலத் தத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்தாலும் உப நிஷதங்கள் கூறும் "தத்வமஸி', "அஹம் பிரும்மாஸ்மி' என்னும் பேருண்மையை ஒரு நாளும் அசைக்க முடியாது. அதில் சிறிதேனும் மாறுதல் ஏற்படுத்த இயலாது. இவ்வுலக இயற்கையானது விடுவிக்க முடியாத ஒரு புதிர் போன்றது. நமது அறிவு வளர வளர இந்தப் புதிர் எவ்வளவு கடினமானது என்பதுதான் தெளிவுபடுகிறது. இதற்கு ஒரு விடை கண்டுபிடிக்க வேண்டு மானால் அதற்குரிய திறவுகோலை, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேட வேண்டும். அந்த இடம் நமது உள்ள மாகிய கோவில். அதைத் திறந்து பார்த்தால் இயற்கையின் ரகசியத்துக்கான திறவுகோலைக் காண முடியும். இங்குதான் முதன் முதலில் உபநிஷத ரிஷிகள் அதைக் கண்டுபிடித்து ஆத்மதரிசனம் பெற்று அழியாப் புகழ் அடைந்தனர்.''

நாம் குறியீடுகளுக்கே முதலிடம் தருகி றோம். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறதோ அதைப் புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம்.


ஒருவர் கதவை மூடிக்கொண்டு பூஜை செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் பூஜையை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர்.

எவரைக் குறித் துப் பூஜை செய்கி றோமோ அவரை விட்டுவிட்டு புற பூஜையைத்தான்- குறியீட்டு முழக்கத்தை தான் நிஜமாகக் கருதி உண்மையை மறக்கிறோம். வார்த்தைக்கு முக்கியத்துவம் தரும் நாம் வார்த்தை கள் உணர்த்தும் உண்மையை மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே நாம் சண்டை போடுகிறோம்.

புத்த பகவான் சொல்லும் ஒரு கதை...

ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது மடைமை.

தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது மடைமை. "வார்த்தைகள்' தெய்வத்தை உணர்வதற்கே... உணர்ந்தவுடன் வார்த்தைகள் இல்லாமல் இருக்கும் நிலையே சிறந்ததாகும்.

பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் நிறைய கற்றுள்ளேன். இல்லற ஞானம் பெற்றுள்ளேன். நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார்.

அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார்.

உணரும் வரைதான் பேச்சு, வார்த்தைகள். உணர்ந்தபின் பேச்சற்ற நிலை.

பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.''

"சும்மாயிரு சொல்லற' என்கிறார் அருணகிரி நாதர்.

சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான்.

அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார்.

""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான்.

""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர்.

ஒரு நாத்திகர் தலைவராக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் பெருமையை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, நாட்டுத் தலைவரிடம் வந்தார்.

தலைவர், ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார்.

""இறைவனின் மாண்பை'' என்றார் விஞ்ஞானி.

""என்னிடம் சொன்ன இறைமாண்பு பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நிரீச்வர வாதத்தை விதியாகக் கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த இறைவன் பற்றிய உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார்.

அந்த விஞ்ஞானியை ஒரு சமயப் பாதிரியார் சந்தித்தார்.

அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்குப் பாதிரியார், ""நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார்.

ஆகவே இறையுணர்வு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. புறத் தர்க்கத்தால்- புறத்தூண்டுதலால் ஏற்படுவதல்ல இறையுணர்வு.

ஒரு அருமையான கலைச்சின்னத்தை அதன் பெருமை தெரிந்த ஒருவர் இருபது வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய கலைச்சின்னத்தை வெறும் இருபது வெள்ளிக் காசுக்கு விற்று விட்டானே'' என்றான்.

இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு இருபது வெள்ளிக்காசு கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.

ஆக கொடுப்பவனின் மனப்பான்மை - வாங்குபவனின் மனப்பான்மையைப் பொருத் தது அதன் மதிப்பு!

எனவே, எல்லாரும் விழிப்புணர்வுடன் ஞானம் பெற்று விளங்குவதே சிறப்பு!

சூட்சுமம் திறந்த திருமந்திரம்

சூட்சுமம் திறந்த திருமந்திரம்தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம் இறை அனுபவத்தை உணர்ந்த நிலைஎப்படிப்பட்டது என்பதை திருமந்திரப் பாடலின் வழியே கடந்த அத்தியாயத்தில்கண்டோம். இந்த இறை அனுபவ நிலை முக்தி நிலைக்கு முற்பட்ட நிலை என்பதையும்கண்டோம். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழும்?சொல்கிறது ஒரு திருமந்திரப் பாடல்.

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.'

-திருமந்திரப் பாடல் எண்: 1579.

இறை அனுபவம் என்ற பேரானந்த நிலை ஏற்படும்போது பேச்சு அறுந்து போகும் என்பதை ஏற்கெனவே கண்டோம். இதையே இப்பாடலின் முதல் வரியில்,

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே'

என்கிறார் திருமூலர்.

இந்தப் பேரானந்த நிலையில் திளைத்து மூழ்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடுஒன் றிணைகிறது. மனிதனும் கடவுளாகும் நிலை இது. இதையே இரண் டாவது வரியில்,

"மாச்சற்ற என்னை சிவமாக்கி மாள்வித்து'

என திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த நிலையை அடைந்த மனிதன் சிவமயமாகி, சிவனோடு ஒன்றி விடுகிறான்.

இந்த வரியில் வருகின்ற கடைசி சொல்லான "மாள்வித்து' என்ற சொல்லுக்கு மிகநுட்பமான பொருள் உண்டு. மாள்வித்து என்றால் மரண மடையச் செய்து என்பதுபொருள். இதில் உள்ள நுட்பம் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. இதையே அந்தமனிதனின் "பர்சனாலிட்டி' என்கிறோம். ஒரு மனிதனைப்போல் அடுத்த மனிதன்இருப்ப தில்லை. உருவம், பேச்சு, சிந்தனை, செயல்பாடு கள் என ஒவ்வொருவிஷயத்திலும் மனிதர் களிடையே சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதையே"தனிமனித அடையாளம்' என்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற "தான்' என்ற ஈகோவின் அடித்தளத்திலேயேஇந்தத் தனி மனித அடையாளங்கள் கட்டி எழுப் பப்படுகின்றன.. "நான்' என்றஅகங்காரத்திற்கும் இதுவே அடிப்படை இந்த அகங்காரத்தையே "ஆணவ மலம்' என்றுஆன்மிகம் சொல்கிறது.

முக்தி நிலையை அடையப் பெரும் தடையாக இருப்பது இந்த அகங்காரம் எனும் ஆணவமலமே! இறையனுபவம் ஏற்படும்போது இந்த ஆணவ மலத்தை இறையருள் அழித்து விடும்.ஒருவகையில் இது ஒரு மரணமே. அதுவரையில் இருந்த "தான்' என்ற அகங்காரம்நிறைந்த மனிதனின் (ஈகோவின்) மரணம். இந்த மரணம் நிகழ்ந்தபின் ஒரு புதியமனிதன்- "தான்' என்ற ஆணவ மலம் இல்லாத ஒரு புதிய பிறவி உருவாகிறது.

இந்த அற்புதத்தை நிகழ்த்துவது இறைவன். தனி மனித முயற்சியால் மட்டும் இதுநிகழாது. இறைவனே இதை நிகழ்த்த வேண்டும். எனவே தான் "மாண்டு' என்ற சொல்லைப்பயன் படுத்தாமல், "மாள்வித்து' என்ற சொல்லை திருமூலர் இங்கேபயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடலின் கடைசி இரு அடிகளில் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

"காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு'

இறைவன் ஜோதி வடிவானவன். ஜோதி என்பது நெருப்பின் அம்சம். வெம்மையும்ஒளியும் அதன் தன்மைகள். ஜோதி வடிவில் இறைவன் உள்ளத்தில் குடிகொள்ளும்போதுஉள்ளம் ஒளியால் நிறையும். உள்ளத்திலிருக்கும் இருட்டு அகலும்.

முப்புரம் எரித்தவன் ஈசன். அந்த ஜோதி தனது வெம்மையைக் காட்டினால்அடியவர்களால் தாங்க முடியுமா? "அன்பே சிவம்'. அந்த அன்பு வடிவான இறைவன்தன் பக்தர்களிடம் வெம்மையைக் காட்டுவதில்லை. பக்தர்களின் உள்ளத்தில் அவன்வெம்மை (சூடு) இல்லாத ஜோதியாகவே குடிகொள்வான். இதையே திருமூலர் "காச்சற்றஜோதி' - சூடு இல்லாத ஜோதி என்கிறார்.

இந்த வெம்மை இல்லாத ஜோதி எனது மூன்று கடன்களையும் தான் ஏற்றுக்கொண் டான்-"கடன் மூன்றும் கைக்கொண்டு' என்கிறார் திருமூலர். அது என்ன மூன்று கடன்கள்?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கருமங்களின் பயனாக பல பாவக் கர்மாக்களைசேர்த்துக் கொள்கிறோம். இவற்றை பிறவிக் கடன் என்கிறோம். ஒரு குழந்தைஉலகில் வந்து பிறக்கும்போதே, கடந்த பிறவிகளில் சேர்த்து வைத்த பிறவிக்கடன்களையும் சுமந்து கொண்டு தான் பிறக்கிறது.

இந்தப் பிறவிக் கடன்களை முற்றிலுமாகத் தீர்த்து முடித்த பின்னரே இனிபிறவியில்லாத பெரு நிலையான முக்தி நிலையை அடைய முடியும். இந்த பிறவிக்கடன்கள் மூன்று வகையானவை. மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின்வழியாகவே இந்தப் பிறவிக் கடன்களை நாம் சேர்த்துக் கொள்கிறோம்.

* மனம்- நமது எண்ணங்கள் உருவாவது மனதில்தான். பாவ எண்ணங்கள், பாவசிந்தனைகள் ஆகியவற்றின் வழியாக நாம் பாவ கர்மாக்களைச் (கடன்களை)சேர்க்கிறோம்.

* வாக்கு- நமது முறையற்ற பேச்சு, பிறரைப் புண்படுத்தும்படியான சொற்கள்,பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆணைகள் என நமது வாக்கினாலும் பாவகர்மாக்கள் நம்மை வந்தடையும்.

* காயம் என்பது உடலைக் குறிக்கும் சொல். இந்த உடலால் நாம் செய்யும்முறையற்ற-தீய செயல்களும் பாவ கர்மாக்களை நம் கணக்கில் சேர்த்து வைக்கும்.

நமது மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றின் மூலமாகவும் நாம் சேர்த்துவைத்துள்ள பிறவிக் கடன்களையே, "கடன் மூன்றும்' என்று திருமூலர்குறிப்பிடுகிறார். இறையனுபவம் கிடைத்த நிலையில் கடவுள் நமது இந்த மூன்றுகடன்களையும் தனதாக ஏற்றுக்கொள்வானாம். (கைக்கொண்டு).

நமது பிறவிக் கடன்களை முழுமையாகத் தீர்த்து முடிக்க பல நூறு பிறவிகள்எடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் இறையருள் நமக்கு இருக்கும் பட்சத்தில்இந்தப் பிறவிக் கடன்கள் அனைத்தையும் இறைவன் ஒரு நொடியில் தனதாக்கிக்கொள்வானாம். தான் எனும் அகங்கார மலம் மரணமடைந்த நிலை யில்தான் இதுநடைபெறும்.

பிறவிக் கடன்கள் தீர்ந்த நிலையே உண்மையான விடுதலை அடைந்த நிலையாகும்."கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்ப ராமாயணவரிகளை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்.

கடன் பட்டவர் நெஞ்சத்தில் கலக்கமும் அச்சமும் நிறைந்திருக் கும். பிறவிக்கடன்கள் அனைத்தும் தீர்ந்த நிலை யிலேயே அந்த ஆன்மா உண்மையான- சுதந்திர மானநிலையை அடையும். அடுத்ததாக பாடலின் இறுதி அடியைக் காணலாம்.

"வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே'

ஞானப் பாதையில் சென்று முக்தி நிலையை அடைய நினைப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான சூட்சுமம் இந்த அடியில் உள்ளது.

ஒரு பூ மலர்ந்து விட்டது என்பதையும் ஒரு பழம் கனிந்து விட்டது என்பதையும்எவரும் சென்று அறிவிக்க வேண்டியதில்லை. அவற்றின் வாசமே காட்டிக்கொடுத்துவிடும். அதுபோன்றே ஒரு மனிதன் இறை அனுபவம் பெற்று, பிறவிக் கடனும்நீங்கிய நிலையே சித்தர் நிலை அல்லது ஞான நிலையாகும். இந்த நிலையை அவர்அடைந்து விட்டார் என்பதை உலகுக்கு எவரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை.

இந்த நிலையை அடைந்தவர்களின் உடலிலிருந்து வெளிவரும் சக்தி அதிர்வுகளே அதை உலகுக்கு உணர்த்திவிடும். உலகமே அவரது அருள் வேண்டி அவரது காலடியில் வந்து விழத் துவங்கும். அவரது புகழும் எட்டுத் திக்கும் பரவத் துவங்கும்.

இங்கேதான் ஒரு சிக்கல் எழுகிறது. சித்தர் நிலையை அடைந்தவர்கள்கூட புகழ்போதை யில் மயங்கிவிடக் கூடும். மனம் தடுமாறத் துவங் கும். அந்த போதைக்குஅடிமையாகிவிட்டால் "முக்தி' எனும் இறுதி நிலையை அடைய அது ஒரு பெரும் தடைச்சுவராகிவிடும்.

இந்த நிலையில் இறைவனது திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் மட்டுமேவாய்த்த புகழ் மாளும். முக்தி நிலையை அடைய முடியும். இதற்கு இறைவன் தனதுதிருவடிகளை நம் உள்ளத்துள் பதித்து நம்மைக் கரையேற்ற வேண்டும்.

இறைவனது திருவடி களின் புகழ் குறித்து திருமூலர் பல பாடல் களைப் பாடி வைத்துள் ளார். அவற்றில் சில...

"திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானம் திண்சித்தி முத்தியே'

-திருமந்திரப் பாடல் எண்-1582

இறைவனின் திருவடிகளே சரணம் என்று பற்றிக் கொண்டு, அதே சிந்தனையோடுதியானித்திருப்பதையே திருவடி ஞானம் என்பார்கள். இந்த திருவடி ஞானமே மனிதனைசிவமயமாக்கும்; வீடுபேற்றினை அளிக்கும் (சிவலோகம் சேர்க்கும்). இந்ததிருவடி ஞானமே நம்மை சிறை வைத்திருக்கும் புலன் இச்சைகள், பந்த பாசங்கள்ஆகியவற்றிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டுவரும். முக்தி எனும் பேரின்பப்பெருவாழ்வும் இந்த திருவடி ஞானத்தினா லேயே சித்தியாகும் என்பதே இப்பாடலின்கருத்தாகும்.

"கழல்ஆர் கமலத் திருவடி என்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா

அழல் சேரும் அங்குஉள் ஆதிப் பிரானும்

குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே!'

-திருமந்திரப் பாடல் எண்-1584

பாடலின் முதல் அடியில் பரமனின் திருவடிக்கு, "கழல் ஆர் திருவடி', "கமலத்திருவடி' என்று இரண்டு உவமைகளைக் கூறுகிறார் திருமூலர். கழல் என்பதுஆண்கள் காலில் அணியும் நகை. "ஆர்' என்றால் "ஒலிக்கும்' என்று பொருள்.ஓசையிடுகின்ற கழலை அணிந்த திருவடிகள் என்று பொருள். சிவன் ஆடலரசன்;நாட்டியத்தின் முதல்வன். அவனது திருவடிகளில் ஒலிக்கும் கழல் இருக்கும்தானே?

இறைவனது பாதங்களை கமலத் திருவடி என்று வர்ணிப்பதிலும் ஒரு சூட்சுமம்உள்ளது. கமலம் என்றால் தாமரை. தந்திர யோகத்தில் சக்கரங்களை கமலம், பத்மம்என்றே அழைப் பார்கள். சக்கரங்கள் சக்தி மையங்கள். இறைவனது பாதச்சக்கரங்களிலிருந்து அளவிட முடியாத சக்தி வெளி வந்து கொண்டேயிருக்கும்.இந்தக் கமலங்களை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அவற்றிலிருந்து வெளிவரும்சக்தியானது பக்தர்களின் உடலில் புகுந்து பக்தர்களை உய்விக்கும்.

"திருவடி என்னும்

நிழல் சேரப் பெற்றேன்'

இறைவனது திருவடிகள் எனும் நிழலில் நான் போய்ச் சேர்ந்தேன் என்கிறார்திருமூலர். இறைவன் ஜோதி வடிவானவன். நெருப்பின் அம்சம். அதன் ஒளியையும்,வெம்மையையும் சாதாரண மனிதர்களால் நேர்கொள்ள முடியாது. ஆனால் இறைவனதுதிருவடிகள் ஒரு நிழல்போல் நம்மை அந்த வெம்மையிலிருந்து பாதுகாக்கும்.எனவேதான் திருவடி என்னும் நிழல் சேரப் பெற்றேன் என்கிறார்.

பிரம்மனும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடிச் சென்ற கதையைப் புராணங்களில் படித்திருப்பீர்கள். நெடுமாலாலும் காண முடியாத இறைவனின் திருவடிகளைசிவஞானத் தில் திளைத்த பக்தர்களால் கண்டுகொள்ள முடியும்.

"நெடுமால் அறியா

அழல்சேரும் அங்கிஉள்'

"அங்கி' என்பது நெருப்பைக் குறிக்கும் சொல். "அழல்' என்றால் வெம்மை.நெருப்பின் வடிவாக இருக்கும் இறைவனின் திருவடிகளை நெடுமாலாலும் காணஇயலவில்லை. ஆனால் பக்தர்களால் காண இயலும்.

"ஆதிப்பிரானும்

குழல்சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே'

இறைவனின் திருவடிகளை பற்றிக் கொண்ட பின் என்ன நிகழும்? அனைத்திற்கும்முதல்வனான ஈசனும் (ஆதிப்பிரானும்) அவனது துணைவியான அழகிய கூந்தலுடைய உமையும்(குழல்) பக்தரின் உடலின் உள்ளே இணைய, இந்த உயிரைத் தாங்கி நிற்கும்கூடாகிய உடல் அழிந்து போயிற்று.

இந்த வரிகளில் சில தந்திர யோக சூட்சுமங்கள் உள்ளன. நமது உடலில் இரு வகையானசக்திகள் உள்ளன- நேர் சக்தி (பாசிடிவ்), எதிர்சக்தி (நெகடிவ்). இதில் நேர்சக்தி என்பது சிவன். எதிர்சக்தி சிவனின் துணைவியான சக்தி. சிவனும்சக்தியும் ஒன்றாக இணைவதே தந்திர யோகத்தின் உச்ச கட்டம்.

மூலாதாரச் சக்கரத்தின் அருகில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியேஎதிர்சக்தியான உமையாள். நேர் சக்தியான சிவம் கபாலத்தின் உள்ளே இருக்கிறது.குண்டலினி சக்தியை தந்திர யோகப் பயிற்சிகளால் தட்டியெழுப்பி சுழுமுனை நாடிவழியே மேலே கொண்டு வந்து கபாலத்தில் இருக்கும் நேர்சக்தியோடு (சிவம்)இணைக்கும்போதே எல்லையற்ற பேரானந்த நிலை ஏற்படும். இறைவனின் திருவடிகளைஇறுகப் பற்றிக் கொள்ளும் போதே இந்த இணைப்பு நிகழும்.

"...என் உயிர்க் கூடும் குலைந்ததே'

என்ற சொற்களிலும் ஆழமான பொருள் உள்ளது. உடல் என்பது நமது உயிரைத் தாங்கிநிற்கும் ஒரு கூடு மட்டுமே. உடலின் உள்ளே சக்தியும் சிவமும் இணையும்போதுஅந்த ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விடுகிறது. முக்தி நிலையை அடைகிறது.இந்த நிலையை அடைந்த பின்னர் அந்த ஆன்மாவுக்கு உடல் எனும் கூடு அவசியமில்லை.

பறவைக்கு சிறகு முளைத்துவிட்டால் அது கூட்டை விட்டுப் பறந்து போகும்அல்லவா? அது போன்றே சிவம்- சக்தி இணைப்பால் உயர் நிலையை அடைந்த ஆன்மா,இந்த உடல் எனும் கூட்டின் தளைகளிலிருந்து விடுபட்டு விடும். பந்தபாசங்களோ, உலக மாயைகளோ இனி அந்த ஆன்மாவைக் கட்டுப்படுத்தாது. இதையே கூடுகுலைந்ததே என்கிறார் திருமூலர்.

இறைவனின் திருவடிகளின் பெருமையைக் கூறும் மற்றொரு பாடலையும் காணலாம்.

"மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான்தன் இணைஅடி தானே'

-திருமந்திரப் பாடல் எண்- 1588

இது ஒரு மிக எளிய பாடல். இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதத் தேவையில்லை.பாடலைப் பலமுறை வாசித்து, மனதில் இருத்தி தியானித்துப் பாருங்கள். பலபுதுப்புது அர்த் தங்கள் புலனாகும்.

கோபப்படுங்கள்...நன்மைக்காக..

கோபப்படுங்கள்...நன்மைக்காக..வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது.
* எல்லா உயிர்களிடமும் இறைவனைக் காண்பவர்கள் மேன்மையானவர்கள். அறிவுநிலையில் மேம்பட்டவர்களால் மட்டுமே அந்நிலையை அடைய முடியும்.
* ஞானத்தை அடைந்ததற்கான அடையாளம், எந்தச் சூழ்நிலையிலும் கோபம் ஒருவனைத் தீண்டாமல் இருக்க வேண்டும்.
* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால், எதிராளியின் நன்மைக்காக தான் அந்தக் கோபம் இருக்க வேண்டும்.
* மனதில் எண்ணிய எண்ணம் எல்லாம் ஒருநாள் ஈடேறும். ஆனால், நம் மனதில் உறுதியும், ஒழுக்கமும் இருந்தால் அன்றி எண்ணம் ஈடேறுவதற்கான சாத்தியம் இல்லை.
* ஒரு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். அதனால், அச்செடியில் உள்ள பலவீனம் நீங்கி வளமுடன் செழித்து வளரும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதால் நம் மனம் ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டுவிடும். அப்போது நம்முடைய பிறவிச் சங்கிலியில் இருந்து நம்மால் விடுபட முடியாது.


வெற்றியை எட்டும் வரை போராடுங்கள்

நம்பிக்கையூட்டுகிறார் அரவிந்தர்
* முயற்சியையும், நம்பிக்கையையும் ஒருபோதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை நம்மால் அடைய இவை மிகவும் அவசியம்.
* நம்முடைய அறிவு சிற்றறிவு. இறைவனுடைய அறிவு பேரறிவு. நம் அறிவைக் கொண்டு திட்டங்கள் வகுத்தாலும், அதை நிறைவேற்றுவது இறைவனே.
* மனிதவாழ்வில் இன்றியமையாதது ஒன்று இருக்குமானால் அது இது தான். வெற்றி கிடைக்கும்வரை முழுமனதுடன் முயன்று கொண்டிருப்பது மட்டுமே.
* லட்சியத்தை முன்வைத்து செயல்படுங்கள். அதற்கான சூழலும், கருவியும் அமையாது போனாலும் கூட முயற்சியைக் கைவிடுதல் என்பது கூடாது.
* சுகபோகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.
* பிறர் நலம் பேணுவதால் நம்முடைய சுகங்கள் போய் விடும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பிறர் நலம் பேணுவதும் சுயநலத்தின் பெரிய வடிவம் என்ற உண்மையை யாரும் அறிவதில்லை.
* எந்த நிலையிலும் தியாகம் செய்யத் தயாராகுங்கள். ஏனென்றால் உலக உயிர்களுக்காகவும், கடவுளுக்காகவும் அதைச் செய்கிறீர்கள்.


நல்லவர்களுக்கு உதவுங்கள்

அறிவுறுத்துகிறார் அவ்வையார்
* தென்னைமரம் வேரினால் உறிஞ்சிய நீரை இனிமையான இளநீராக மாற்றி நமக்கு வழங்குகிறது. அதுபோல, நல்லவர்களுக்குச் செய்யும் உதவி நிச்சயமாக நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.
* நல்லவர்களுக்குச் செய்த உதவி கல்லில் வடித்த எழுத்துபோல எக்காலத்திலும் நம் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால், தீயவர்களுக்குச் செய்த உதவியோ நீரில் எழுத்துபோல மறைந்துவிடும்.
* பால் சுடச்சுட மணக்கிறது. வெண்சங்கு சுடச்சுட அதன் நிறத்தில் மாறுவதில்லை. அதுபோல, உயர்ந்தவர்கள் துன்பம் வந்த போதிலும் தன் நல்ல இயல்பை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.
* பருவகாலத்திற்கு தகுந்தாற்போல, மரங்கள் கனிகளைத் தருகின்றன. மற்ற காலங்களில் அவை பழங்களைத் தருவதில்லை. இதைப் போல நம்முடைய முயற்சிகளும் அதற்கான பருவத்தில்தான் பலன் கொடுக்கும்.


கெட்டவர்களையும் வெறுக்காதீர்கள்

- அமைதிப்படுத்துகிறார் ரமணர்* இறையருளைப் பெற பரிபூரணமாக கடவுளைச் சரணாகதி அடைய வேண்டும். சரணாகதி என்பது வெறும் வார்த்தைப் பிரயோகமாக இருக்கக்கூடாது. இதயத்திலிருந்து உணர்வுபூர்வமாக எழ வேண்டும்.
* எச்செயலையும் ""நான் செய்கிறேன்''என்ற சொல்லும்போது அகந்தை உணர்வு நம்மை அறியாமலேயே நம்மிடம் உண்டாகிவிடும். உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் நாம் வெறும் கருவி மட்டுமே. சிருஷ்டி கர்த்தா அல்ல.
*" நான்! நான்! ' என்று சதா எண்ணிக் கொண்டு திரிபவனும் ஒருநாள் இந்த உடலைவிட்டு வெறும் கட்டையாகக் கீழே விழுந்து தான் ஆகவேண்டும். அதனால் நான் என்ற அகந்தையுணர்வு யாருக்கும் இருக்கக் கூடாது.
* நிலையில்லாமல் சலித்து ஓடுவதுதான் மனித மனதின் இயல்பு. இடைவிடாததியானப்பயிற்சியை மேற் கொண்டால் மட்டுமே அலையும் மனதை அமைதிப்படுத்த முடியும்.
* எண்ணங்களே மனம். அதன் வெளிப்பாடே இவ்வுலகமாக இருக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்துச் செயல்களுக்கும் மையமாக இதயம் இருக்கிறது. உலக விஷயங்களிலும் பிறர் செயல்பாடுகளிலும் மனதை செலுத்துதல் கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அவர்களிடமும் வெறுப்பு எண்ணம் கூடாது. விருப்பு, வெறுப்பு இரண்டு குணங்களில் இருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பாவம் செய்து பணம் சேர்க்காதீர்!

- எச்சரிக்கிறார் மகாவீரர்
* அறவழியில் நிலையாக வாழ்ந்து எல்லா உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். கொல்லாமை வழியில் வாழ்பவன் எல்லா இன்பங்களையும் பெறும் தகுதி பெறுவான்.
* உண்மை மட்டும் பேசுவதில் உறுதி கொள்ளுங்கள். பேச்சானது கடினமானதாகவோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதாகவோ இருந்தால் அதை அறவே தவிர்த்து விடுங்கள்.
* ஆமை தன் உறுப்புக்களை உள்ளே அடக்கிக் கொள்வதுபோல, ஒரு மனிதன் இன்பங்களில் இருந்து தன்னைத்தானேவிடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
* பணத்தை அமிர்தம் என்று நினைத்து பாவச் செயல்கள் மூலம் சம்பாதிப்பவன் மரணத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு மீளாத நரகத்திற்கு தயாராகிறான்.
* கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய தீய குணங்கள் மனிதப்பண்பினை அழித்துவிடும்.
* இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி ஒழுக்கம் தான் மனிதனுக்கு மிக அவசியமானது. நல்லொழுக்கம் ஒன்றே நம்மை சொர்க்கத்தில் சேர்க்கும்.
* எவன் பிறருடைய சுகத்திற்காகவும், நன்மைக்காகவும் தன்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறானோ அவனுக்கு சுகமும் நன்மையும் தானாகவே வந்து சேரும்.


உனக்கு நீயே தலைவன்

- உற்சாகமூட்டுகிறார் புத்தர்
* குடியும், ஏமாற்றுவதும், பொறாமையும், வெறுப்புணர்வும், கோபமும், தீய சிந்தனையும் நம் வாழ்வின் புனிதத்தன்மையைக் கெடுத்து பாவக்குழியில் தள்ளிவிடும்.
* இந்த உலக இன்பம் நீண்டகாலப் பலனைத் தராது. வாழ்வின் நிலையாமையை உணர்ந்து உண்மைத் தன்மையை உணர்தல் வேண்டும்.
*கவலையை உங்களுடைய பகைவனாக எண்ணி, அதனுடன் போரிடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
* தர்மசிந்தனை உங்கள் துன்பத்தையும், கவலையையும் அடியோடு விரட்டிவிடும் ஆற்றல் கொண்டது. அறத்தின் உயர்வை உணர்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
* அகந்தை கொண்டவர்களின் மனம் அலைபாயும். அமைதியை இழக்கும். நான் என்ற எண்ணம் தலைதூக்கும். அதனால் மயக்கம் தரும் அகந்தையை வெறுத்து ஒதுக்குங்கள்.
* வீணான ஆராய்ச்சியில் காலத்தைக் கழிக்காதீர்கள். அறிவின் துணை கொண்டு உண்மையைக் காண முயலுங்கள். காரணம் இல்லாமல் உலகில் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை.
* இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கிவிடும். அதுபோல, ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.
* கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டில் மழைநீர் இறங்காததுபோல, நன்னெறிப் பயிற்சியுள்ள மனதில் ஆசைகள் நுழைவதில்லை.
* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே உங்களது அடைக்கலமாகட்டும்.
* உனக்கு நீயே தலைவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனக்குத் தானே எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும். உள்ள உறுதியோடு மன அடக்கத்தைப் பழகியவன் பெறுதற்கரிய பேறுகளைப் பெற்றவன் என்றால் மிகையில்லை.

தைரியத்தை எங்களுக்கு கொடு!

- கடவுளிடம் கேட்க சொல்கிறார் தாகூர்
* மனிதனுக்கு படிப்பு மிகவும் அவசியம். அது இருளை நீக்கி ஒளியைக் காட்டும். இறப்பையே நீக்கும் அமிர்தமாகவும் கல்விச்செல்வம் விளங்குகிறது.
* மனம் என்பது கடவுளின் படைப்பில் ஆபத்தான ஒரு அம்சம். இந்த மனதை அடக்கி வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டுமே தவிர, நமக்கு மனம்
எஜமானனாக இருக்க அனுமதிக்கக் கூடாது. மனதை அதன் போக்கில் விட்டால் நம்மை ஆபத்தில்தான் கொண்டு சேர்க்கும்.
* ஆபத்தான விஷயங்களைக் கையாளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலையும் கண்ணும், கருத்துமாக கையாண்டால்தான் நன்மை உண்டாகும்.
* மனித வாழ்க்கை நிலையற்றது. நீண்டநாள் வாழ்வோம் என்ற மமதையில் கெட்டதையே செய்துகொண்டிருக்கிறீர்கள். தாமரையில் உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. இதை உணர்ந்து கொண்டு வாழ்ந்தால், கெட்டது செய்ய மனம் இடம் கொடுக்காது.
* கடவுளை நீங்கள் வணங்கும்போது, ""இறைவா!
அபாயங்களிலிருந்து என்னை பாதுகாத்திடு,'' என கெஞ்சாதீர்கள். ""அபாயங்களை எதிர்க்கக்கூடிய பயமற்ற தன்மையை எனக்கு கொடு,'' என வேண்டுங்கள். இத்தகைய பிரார்த்தனையைத்தான் இறைவனும் எதிர்பார்க்கிறார்.


பணம் எப்போது வரும்?

வழி சொல்கிறார் தாயுமானவர்
* உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால், மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்டவர்களின் பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என உங்கள் மனதிற்கு தோன்றுகிறதோ, அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
* மனம் சலிக்காமல் இறைவன் மீது பக்தி செலுத்துபவனுக்கு, வர வேண்டிய செல்வம் அனைத்தும் தானாகவே வந்து சேரும். அவனுக்கு பிள்ளைகளும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட நெருங்குவதற்கு தயக்கம் காட்டுவான். உடல் நலமும் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், ஞானமும் கைகூடும்.
* பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து, அடியில் இருக்கும் நல்ல தண்ணீர் கண்ணுக்குத்தெரியும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து, அதன்படி நடந்து கொண்டு நடநந்தால் அறிவு தெளிவடையும்.


பணக்கார குட்டிச்சுவர்கள்

வரிந்து கட்டுகிறார் வாரியார்
* சுருக்கெழுத்து தெரிந்தவனுக்கு அதிலுள்ள கருத்தைப் படிக்கமுடியும். மற்றவர்களுக்கு அது வெறும்
கோடாகவே தெரியும். அதுபோல, பக்தியுள்ளவனுக்கு கருவறையில் இருக்கும் சிலை கடவுளாகத் தெரியும்.
மற்றவர்கள் கண்ணுக்கு வெறும் சிலையாக மட்டுமே தெரியும்.
* எவ்வளவு பெரிய சுவராக இருந்தாலும் கூரை இல்லாவிட்டால் அது குட்டிச்சுவர்தான். அதுபோல எவ்வளவு பணம் இருந்தாலும் தர்மசிந்தனை இல்லாவிட்டால் அம்மனிதன், பயனில்லாத குட்டிச்சுவருக்கே ஒப்பானவன் ஆவான். ஒருவனுக்கு எந்தக் காலத்திலும் அவன் செய்த தர்மம் மட்டுமே துணையாக வரும்.
* "இவள் என் தாயே இல்லை' என்று வெறுப்பினால் மகன் தாயைப் பழித்தாலும், அவள் தன் பிள்ளையை வெறுப்பதில்லை. அதுபோல, கடவுள் இல்லை என்று பழித்தாலும், அவர் தன் பிள்ளைகளாகிய நமக்கு கருணை செய்ய மறப்பதில்லை.
* மரண சமயத்தில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதைப் பொறுத்தே அடுத்த பிறவி வாய்க்கும். எனவே, இளவயது முதலே பக்தி, ஜபம், தியானம் போன்ற நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டியது அவசியம்.
* பால் தரும் பசு நமக்கு சொந்தமானதுதான் என்றாலும், கன்றுக்குட்டி பக்கத்தில் இருந்தால் தான் அதனிடமிருந்து எளிதாக பாலைக் கறக்க முடியும். அதுபோல, இறைவன் நமக்கு அருள் தரும் உரிமை கொண்டவராக இருந்தாலும், அவரது அருள் பெற்ற அடியார்களின் துணையை நாடினால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.


பேராசை கூடவேகூடாது

சாடுகிறார் சாரதாதேவியார்
* மனிதப்பிறவி துன்பங்கள் நிறைந்ததுதான். இதற்காக எந்த துன்பத்தைக் கண்டும் பயப்பட வேண்டாம். துன்பத்தை தாங்கி, அதை சமாளிப்பவரே மனிதரில் சிறந்தவர் ஆவார். இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தால், துன்பங்களை பொறுத்துக் கொள்ளும் பக்குவம் தாமாகவே வந்துவிடும்.
* பணத்தின் மீது ஈடுபாடு கொண்டால் மனம் அழுக்காகிவிடும். பணம், பொருள் இவற்றில் நம் மனத்தைச் செலுத்தத் தொடங்கினால், வேறு திசையில் செல்லத் தொடங்கி விடுவோம். பேராசைக்காரர்களே! போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
* மனிதர்களிடம் அன்பு செலுத்தினால் அந்த அன்பினை அவர்கள் உதாசீனப்படுத்தலாம். ஆனால், ஆண்டவன் மீது அன்பு காட்டினால் அவன் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார். அதனால் எப்போதும் இன்பம் மட்டும் இருக்குமேயன்றி, துன்பம் இருக்காது.
* தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வது தான். ஆனாலும், தண்ணீர் மீது விழும் சூரியனின் கிரணங்கள், அத்தண்ணீரை வானத்திற்கு உயர்த்தி விடுகின்றன. இதைப்போலவே, தாழ்ந்த விஷயங்கள், போகப்பொருட்கள் இவற்றை நோக்கி மனிதன் கீழ்நோக்கிச் செல்கின்றான். ஆனால், இறைவனுடைய அருள் மனிதன் மீது விழும் போது, அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

சோம்பல் கூடவே கூடாது!

எச்சரிக்கிறார் திருவள்ளுவர்
* தண்ணீர் நிறைந்த குளத்தில் உள்ள மலரின் தண்டு, தண்ணீரின் ஆழத்திற்கேற்ப வளர்ந்து நிற்கும். அதுபோல, ஒருவரின் உயர்வு அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்ப இருக்கும்.
* சோம்பல் கூடவே கூடாது. யார் ஒருவர் சோம்பலுடன் இருக்கிறாரோ, அவருக்கு அதனாலேயே அழிவு உண்டாகும். அவரது குடும்பமும் அழிவைச் சந்தித்து சிதைந்து விடும்.
* தன்னிடம் உள்ள செல்வ வளத்தை, பிறருக்கு நன்மை செய்வதில் செலவிடுபவர்கள் உயர்ந்தோர் ஆவர்.
இத்தகைய குணமுள்ள நல்லவர்கள் வறுமையுடன் இருந்தால் அதுவேகொடுமையிலும் கொடுமையானதாகும். இதைவிட, தன்னிடம் உள்ள செல்வத்தால் பிறருக்கு தீங்கு செய்யும் கொடியவர்களிடம், பணம் இருந்தால் இன்னும் கொடுமையானது.
* ஒருவருக்கு, எதிரியால் மட்டும்தான் துன்பம் உண்டாக வேண்டுமென்பதில்லை. எதிரியை விட கொடுமையான துன்பம் தரக்கூடியது பொறாமை. இந்த குணம் கொண்டவன் அழிவானே தவிர, இம்மியளவு நன்மைகூட பெற முடியாது.
* இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு அனைத்து உயிர்களும் ஒன்றே. அனைத்து உயிர்களுக்கும் அருளும் இறைவனைப் போற்றி வழிபடுபவர்களுக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படாது.

வறட்டு இருமலை முற்றிலும் நீக்கும் மஞ்சளின் மருத்துவ பயன்கள்...!!

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.
மஞ்சளின் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை.  இவை மஞ்சள் என்கிற பெயரில்  நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
 
மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை  குணமாகும்.
 
மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று  நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.
 
மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
 
ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு இருமலுடன் வரும் காய்ச்சல் குணமாகும்.
 
மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
 
மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
 
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
 
மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி அரை மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.

Saturday 17 August 2019

கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது!... வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்

நமது உடலில் இருக்கும் உறுப்புகளில் சிலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஏன் கல்லீரலுக்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை.
உடல் உள்ளுறுப்புகளில் சிறுநீரகமோ, இதயமோ பாதிக்கப்பட்டால் இன்றைக்கு மாற்று அறுவைசிகிச்சை சாத்தியம்.
விழித்திரை பாதிப்படைந்தால்கூட மாற்றுவதற்கான மருத்துவத் தொழில்நுட்பம் இருக்கிறது.

ஆனால் கல்லீரல் பாதிப்படைந்து விட்டால் நம்மால் அவ்வளவு எளிதில் அதனை மாற்றிவிட முடியாது. கல்லீரலானது 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டால் கூட அது சீராகத் தன் பணியைச் செய்து கொண்டே இருக்கும். அதில் இருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துவிட்டால் கூட, சிறிது நாள்களில் தானே வளர்ந்துவிடும்.
ஆனால், இந்தக் கல்லீரலை நாம் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் முழு கல்லீரல் பாதிப்படைந்துவிட்டால் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதாம்.
கல்லீரலின் வேலை
நாம் உண்ணும் உணவு செரிமானமாக்கவும், அதிலிருந்து சக்தியை சேமித்து வைக்கவும், கொழுப்பை உற்பத்தி செய்யவும் உதவும் கல்லீரல், குளுக்கோஸை தேவையான போது வெளியிடவும் செய்கின்றது. அதுமட்டுமின்றி நம் ரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது.
இதனை சாதாரண வேலை என்று தவறாக எண்ணி விடாதீர்கள். இதுதான் நமது உடலில் மிகப் பெரிய வேலை. இது தடைப்பட்டால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் நின்றுபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் உணர்ந்திருக்கவும், மனதில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
பொதுவாக கல்லீரல் பாதிப்பினை தெரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமாக காரியமாகும். ஏனென்றால் 80 சதவீதம் பாதிக்கப்பட்டாலும் அதன் வேலையை எந்தவொரு தாமதமின்றி செய்து கொண்டிருப்பதால் பாதிப்பின் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை ஆனால் சில தருணங்களில் அவ்வப்போது இந்த அறிகுறிகள் தென்படும்.
அவற்றினை நாம் சரியாக கவனித்திருக்கவும் மாட்டோம் என்பதே உண்மை...
முக்கியமாக கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது மற்றும் அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவது, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல் இவையெல்லாம் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரல் பாதிப்பை தெரிந்துகொள்ள சில அறிகுறிகளை இங்கே காணலாம்.
வாய் துர்நாற்றம்
பொதுவாக வாய் துர்நாற்றத்திற்கு காரணம் நமது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்வதே காரணமாகும். இது கல்லீரல் சரியாக இயங்கவில்லையென்றால் கடுமையான நாற்றம் ஏற்படும்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்
சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதோடு, குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படுமாம்.
செரிமானப் பிரச்சினை
கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்குமாம். இந்த பிரச்சினை தெரிந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாம்.
வெளுத்த சருமம்
சில தருணங்களில் சருமத்தில் ஆங்காங்கே தோலானது வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக இருந்தால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாம்.
அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
நமது உடலில் வறட்சி அதிகமாக இருந்தால் உடலிலிருந்து வெளியே கழிவுகளும் அடர்ந்த நிறத்தில் இருக்குமாம். இது தொடர்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு என்று அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் நிற கண்கள்
கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் கண்கள் மஞ்சள் நிறமாகவும், மஞ்சள் காமாலை நோயும் ஏற்படுமாம்.
வாய் கசப்பு
வாயில் எப்பொழுதும் அதிகமான கசப்பு சுவை தெரிந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாம். ஏனென்றால் நமது வாயில் கசப்பான சுவையினை ஏற்படுத்துவது கல்லீரலில் சுரக்கும் பைல் என்னும் நொதியினால் தானாம்.
வயிறு வீக்கம்
வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் கல்லீரல் பாதிப்பாகும்.
கல்லீரல் கொழுப்பினை சரிசெய்யும் இயற்கை உணவுகள்
க்ரீன் டீ
தினசரி கிரீன் டீசை சேர்த்துக் கொண்டால், அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சினைக்கு வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
பாகாற்காய்
கசப்பாக இருக்கும் பாகற்காய் உங்களது கல்லீரல் கொழுப்பினை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்குமாம்.

பால் நெருஞ்சில்

பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில் சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முழு தானியங்கள்
முழுதானியங்களை சேர்த்துக் கொள்வதால் கல்லீரல் கொழுப்பினை உடைத்து அவற்றிலுள்ள தீங்க விளைவிக்கக்கூடிய பொருட்களை வெளியேற்றும் குணம் கொண்டது.
தக்காளி
தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும்.
கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
ஆல்கஹால் மற்றும் சிகரெட் போன்றவற்றை குறைப்பதால் மட்டும், நாம் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை. கல்லீரல் பிரச்சினை அறிகுறிகள் தோன்றும் முன்னே நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்.
வயிற்றில் சதை விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முதல் அறிகுறியே உப்பிய வயிறு தானாம்.
உணவு முறை மற்றும் உடற்பயிற்சி சரியாக இருந்தாலும் அடிவயிற்றில் சதை விழுந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

கொழுப்பு உணவுகள்
கல்லீரலின் முதல் எதிரியே கொழுப்பு தான். ஆதலால் கொழுப்பு உணவுகள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
மிதமிஞ்சிய மதுப்பழக்கம்
மதுப்பழக்கம் கல்லீரலுக்கு கெடுதல் அளிக்கும் முக்கியமான எதிரியாகும். மது விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 பெக்குகளுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதிகபட்சம் 4 பெக்குகள் என்று கொண்டாலும், அதற்கு மேல் குடிப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து, அந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பது நல்லது.
புகைப்பழக்கம்
இன்று பலருக்கும் சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று தெரிந்திருந்தாலும், அதிலிருந்து விடுவதற்கு மிகுந்த சிரமத்தினையே ஏற்படுத்துகின்றது. இந்த பழக்கமானது கடைசியில் நமது கல்லீரல் மற்றும் நுரையீரல்களை முற்றிலும் அழித்துவிட்டுத் தான் ஓயுமாம்.
உடற்பயிற்சியின்மை
இன்று மனிதர்களை சோமிபேறியாகவும், மந்தமாகவும் வைப்பதற்கு பலவித தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆதலால் தனது வேலையினைக் கூட தானே செய்யாமல் பலரும் காணப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வியாதிகள் அவர்களைத் தேடி வரும் என்பது தெரிந்தும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.
மேலும் உடற்பயிற்சி மற்றும் கை, கால்களை அசைத்து தனது வேலைகளை தானே செய்தால் தான் நமது உடலில் உயிர்ப்பு இருக்குமாம். அதைவிட்டுவிட்டு சொகுசு வாழ்க்கை என்று அலையும் இன்றைய இளையதலைமுறையினருக்கு ஆயுளும் குறைவு என்ற உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.
தவறான டயட்
டயட் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் அவர்களின் உடலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய ‘கடுமையான டயட்' முறைகளை தவிர்த்து, ஒரே சீரான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது என்று கூறப்படுகின்றது.

கல்லீரலை பாதிக்க செய்யும் 12 பழக்கவழக்கங்கள்!


மனித உடல் ஆரோக்கியத்துடன் இயங்க தேவைப்படும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு கல்லீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்த நீர் சுரக்க, ஈமோகுளோபின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, மற்றும் ஏனைய தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால், காயங்கள் ஆற என பல மூக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் உதவுகிறது.
ஆனால், நமக்கு தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்யும் ஒருசில அன்றாட பழக்கவழக்கங்கள் நமது கல்லீரலை வலுவாக பாதிப்படைய வைக்கின்றன. சில சமயங்களில் இதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறது…..
மருந்துகள்
அதிகமாக மருந்துகள், மூலிகைகள் மற்றும் கூடுதல் எனர்ஜி பவுடர்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக கூட கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒருசிலர் சிறிய தலைவலி என்றால் கூட ஒரு மாத்திரையை போட்டுக் கொள்வார்கள். இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
தூக்கமின்மை
தூக்கமின்மையும் கல்லீரலை பாதிக்கிறது என்பது தான் ஆச்சரியமான ஒன்று. தூக்கமின்மை கல்லீரலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்பட காரணியாக இருக்கின்றது.
ஊட்டச்சத்து இன்மை
வருடக்கணக்கில் ஊட்டச்சத்து குறைபாடு, சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் உணவில் இல்லாமல் இருப்பது, உடல்பருமன் போன்றவை தொடர்ந்து இருப்பது கல்லீரலை பாதிப்படைய செய்கிறது.
கொழுப்பு
ஆல்கஹால் மட்டுமின்றி, உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டு வருவதும் கூட கல்லீரலை சுற்றி கொழுப்பு சேர காரணியாக இருக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவு
அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனம், அடிக்ட்டிவ்ஸ் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை தான் கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.
காய்கறி, பழங்கள்
உணவுமுறையில் நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஈ, ஜின்க், செலினியம் போன்றவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வைட்டமின் பி
கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை போக்க வைட்டமின் பி சிறந்து செயல்புரிகிறது. பழங்கள், நட்ஸ், முட்டை, மீன், கோழி, பருப்பு போன்றவற்றில் வைட்டமின் பி சத்து மிகுதியாக இருக்கிறது.
அதிகமான கொலஸ்ட்ரால்
உடலில் எல்.டி.எல் எனும் தீய கொழுப்பு அதிகமாக சேர்வதால் இதயம் மட்டுமின்றி கல்லீரலும் பாதிப்படைகிறது. இதை தவிர்க்க தான் காய்கறி, பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறப்படுகிறது.
காலை உணவை தவிர்ப்பது
கல்லீரல் செயல்திறன் குறைபாடு ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைக்கும் நபர்கள் தான் இந்த தவறை நிறைய செய்கிறார்கள்.
சிறுநீரை அடக்குதல்
சிலர் சிறுநீரை அடக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறானது. இந்த பழக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை வலுவாக பாதிப்படைய செய்கின்றன.
ஆல்கஹால்
பெரும்பாலும் கல்லீரல் பாதிப்படைய காரணியாக இருப்பது இந்த குடி பழக்கம் தான். தினமும் மூன்று க்ளாஸ் ஆல்கஹால் பருகுவது கண்டிப்பாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகை
புகைப்பதால் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரலும் மிகுதியாக பாதிப்படைகிறது. சிகரட் மூலமாக உடலில் சேரும் நச்சுக்கள் மெல்ல மெல்ல கல்லீரலில் அதிகரித்து, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் உண்டாகி கல்லீரல் செல்களில் சேதம் ஏற்பட காரணியாக அமைகிறது.