Wednesday, 15 April 2020

கோபப்படுங்கள்...நன்மைக்காக..

கோபப்படுங்கள்...நன்மைக்காக..வித்தியாசமாய் சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதனை அறிய நினைத்தால் அது அடங்கும். மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது.
* எல்லா உயிர்களிடமும் இறைவனைக் காண்பவர்கள் மேன்மையானவர்கள். அறிவுநிலையில் மேம்பட்டவர்களால் மட்டுமே அந்நிலையை அடைய முடியும்.
* ஞானத்தை அடைந்ததற்கான அடையாளம், எந்தச் சூழ்நிலையிலும் கோபம் ஒருவனைத் தீண்டாமல் இருக்க வேண்டும்.
* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால், எதிராளியின் நன்மைக்காக தான் அந்தக் கோபம் இருக்க வேண்டும்.
* மனதில் எண்ணிய எண்ணம் எல்லாம் ஒருநாள் ஈடேறும். ஆனால், நம் மனதில் உறுதியும், ஒழுக்கமும் இருந்தால் அன்றி எண்ணம் ஈடேறுவதற்கான சாத்தியம் இல்லை.
* ஒரு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். அதனால், அச்செடியில் உள்ள பலவீனம் நீங்கி வளமுடன் செழித்து வளரும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதால் நம் மனம் ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டுவிடும். அப்போது நம்முடைய பிறவிச் சங்கிலியில் இருந்து நம்மால் விடுபட முடியாது.


வெற்றியை எட்டும் வரை போராடுங்கள்

நம்பிக்கையூட்டுகிறார் அரவிந்தர்
* முயற்சியையும், நம்பிக்கையையும் ஒருபோதும் கைவிடாதீர்கள். நம்முடைய லட்சியத்தை நம்மால் அடைய இவை மிகவும் அவசியம்.
* நம்முடைய அறிவு சிற்றறிவு. இறைவனுடைய அறிவு பேரறிவு. நம் அறிவைக் கொண்டு திட்டங்கள் வகுத்தாலும், அதை நிறைவேற்றுவது இறைவனே.
* மனிதவாழ்வில் இன்றியமையாதது ஒன்று இருக்குமானால் அது இது தான். வெற்றி கிடைக்கும்வரை முழுமனதுடன் முயன்று கொண்டிருப்பது மட்டுமே.
* லட்சியத்தை முன்வைத்து செயல்படுங்கள். அதற்கான சூழலும், கருவியும் அமையாது போனாலும் கூட முயற்சியைக் கைவிடுதல் என்பது கூடாது.
* சுகபோகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.
* பிறர் நலம் பேணுவதால் நம்முடைய சுகங்கள் போய் விடும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பிறர் நலம் பேணுவதும் சுயநலத்தின் பெரிய வடிவம் என்ற உண்மையை யாரும் அறிவதில்லை.
* எந்த நிலையிலும் தியாகம் செய்யத் தயாராகுங்கள். ஏனென்றால் உலக உயிர்களுக்காகவும், கடவுளுக்காகவும் அதைச் செய்கிறீர்கள்.


நல்லவர்களுக்கு உதவுங்கள்

அறிவுறுத்துகிறார் அவ்வையார்
* தென்னைமரம் வேரினால் உறிஞ்சிய நீரை இனிமையான இளநீராக மாற்றி நமக்கு வழங்குகிறது. அதுபோல, நல்லவர்களுக்குச் செய்யும் உதவி நிச்சயமாக நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.
* நல்லவர்களுக்குச் செய்த உதவி கல்லில் வடித்த எழுத்துபோல எக்காலத்திலும் நம் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால், தீயவர்களுக்குச் செய்த உதவியோ நீரில் எழுத்துபோல மறைந்துவிடும்.
* பால் சுடச்சுட மணக்கிறது. வெண்சங்கு சுடச்சுட அதன் நிறத்தில் மாறுவதில்லை. அதுபோல, உயர்ந்தவர்கள் துன்பம் வந்த போதிலும் தன் நல்ல இயல்பை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.
* பருவகாலத்திற்கு தகுந்தாற்போல, மரங்கள் கனிகளைத் தருகின்றன. மற்ற காலங்களில் அவை பழங்களைத் தருவதில்லை. இதைப் போல நம்முடைய முயற்சிகளும் அதற்கான பருவத்தில்தான் பலன் கொடுக்கும்.


கெட்டவர்களையும் வெறுக்காதீர்கள்

- அமைதிப்படுத்துகிறார் ரமணர்* இறையருளைப் பெற பரிபூரணமாக கடவுளைச் சரணாகதி அடைய வேண்டும். சரணாகதி என்பது வெறும் வார்த்தைப் பிரயோகமாக இருக்கக்கூடாது. இதயத்திலிருந்து உணர்வுபூர்வமாக எழ வேண்டும்.
* எச்செயலையும் ""நான் செய்கிறேன்''என்ற சொல்லும்போது அகந்தை உணர்வு நம்மை அறியாமலேயே நம்மிடம் உண்டாகிவிடும். உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் நாம் வெறும் கருவி மட்டுமே. சிருஷ்டி கர்த்தா அல்ல.
*" நான்! நான்! ' என்று சதா எண்ணிக் கொண்டு திரிபவனும் ஒருநாள் இந்த உடலைவிட்டு வெறும் கட்டையாகக் கீழே விழுந்து தான் ஆகவேண்டும். அதனால் நான் என்ற அகந்தையுணர்வு யாருக்கும் இருக்கக் கூடாது.
* நிலையில்லாமல் சலித்து ஓடுவதுதான் மனித மனதின் இயல்பு. இடைவிடாததியானப்பயிற்சியை மேற் கொண்டால் மட்டுமே அலையும் மனதை அமைதிப்படுத்த முடியும்.
* எண்ணங்களே மனம். அதன் வெளிப்பாடே இவ்வுலகமாக இருக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்துச் செயல்களுக்கும் மையமாக இதயம் இருக்கிறது. உலக விஷயங்களிலும் பிறர் செயல்பாடுகளிலும் மனதை செலுத்துதல் கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அவர்களிடமும் வெறுப்பு எண்ணம் கூடாது. விருப்பு, வெறுப்பு இரண்டு குணங்களில் இருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பாவம் செய்து பணம் சேர்க்காதீர்!

- எச்சரிக்கிறார் மகாவீரர்
* அறவழியில் நிலையாக வாழ்ந்து எல்லா உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். கொல்லாமை வழியில் வாழ்பவன் எல்லா இன்பங்களையும் பெறும் தகுதி பெறுவான்.
* உண்மை மட்டும் பேசுவதில் உறுதி கொள்ளுங்கள். பேச்சானது கடினமானதாகவோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதாகவோ இருந்தால் அதை அறவே தவிர்த்து விடுங்கள்.
* ஆமை தன் உறுப்புக்களை உள்ளே அடக்கிக் கொள்வதுபோல, ஒரு மனிதன் இன்பங்களில் இருந்து தன்னைத்தானேவிடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
* பணத்தை அமிர்தம் என்று நினைத்து பாவச் செயல்கள் மூலம் சம்பாதிப்பவன் மரணத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு மீளாத நரகத்திற்கு தயாராகிறான்.
* கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய தீய குணங்கள் மனிதப்பண்பினை அழித்துவிடும்.
* இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி ஒழுக்கம் தான் மனிதனுக்கு மிக அவசியமானது. நல்லொழுக்கம் ஒன்றே நம்மை சொர்க்கத்தில் சேர்க்கும்.
* எவன் பிறருடைய சுகத்திற்காகவும், நன்மைக்காகவும் தன்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறானோ அவனுக்கு சுகமும் நன்மையும் தானாகவே வந்து சேரும்.


உனக்கு நீயே தலைவன்

- உற்சாகமூட்டுகிறார் புத்தர்
* குடியும், ஏமாற்றுவதும், பொறாமையும், வெறுப்புணர்வும், கோபமும், தீய சிந்தனையும் நம் வாழ்வின் புனிதத்தன்மையைக் கெடுத்து பாவக்குழியில் தள்ளிவிடும்.
* இந்த உலக இன்பம் நீண்டகாலப் பலனைத் தராது. வாழ்வின் நிலையாமையை உணர்ந்து உண்மைத் தன்மையை உணர்தல் வேண்டும்.
*கவலையை உங்களுடைய பகைவனாக எண்ணி, அதனுடன் போரிடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
* தர்மசிந்தனை உங்கள் துன்பத்தையும், கவலையையும் அடியோடு விரட்டிவிடும் ஆற்றல் கொண்டது. அறத்தின் உயர்வை உணர்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
* அகந்தை கொண்டவர்களின் மனம் அலைபாயும். அமைதியை இழக்கும். நான் என்ற எண்ணம் தலைதூக்கும். அதனால் மயக்கம் தரும் அகந்தையை வெறுத்து ஒதுக்குங்கள்.
* வீணான ஆராய்ச்சியில் காலத்தைக் கழிக்காதீர்கள். அறிவின் துணை கொண்டு உண்மையைக் காண முயலுங்கள். காரணம் இல்லாமல் உலகில் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை.
* இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கிவிடும். அதுபோல, ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.
* கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டில் மழைநீர் இறங்காததுபோல, நன்னெறிப் பயிற்சியுள்ள மனதில் ஆசைகள் நுழைவதில்லை.
* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே உங்களது அடைக்கலமாகட்டும்.
* உனக்கு நீயே தலைவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனக்குத் தானே எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும். உள்ள உறுதியோடு மன அடக்கத்தைப் பழகியவன் பெறுதற்கரிய பேறுகளைப் பெற்றவன் என்றால் மிகையில்லை.

தைரியத்தை எங்களுக்கு கொடு!

- கடவுளிடம் கேட்க சொல்கிறார் தாகூர்
* மனிதனுக்கு படிப்பு மிகவும் அவசியம். அது இருளை நீக்கி ஒளியைக் காட்டும். இறப்பையே நீக்கும் அமிர்தமாகவும் கல்விச்செல்வம் விளங்குகிறது.
* மனம் என்பது கடவுளின் படைப்பில் ஆபத்தான ஒரு அம்சம். இந்த மனதை அடக்கி வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டுமே தவிர, நமக்கு மனம்
எஜமானனாக இருக்க அனுமதிக்கக் கூடாது. மனதை அதன் போக்கில் விட்டால் நம்மை ஆபத்தில்தான் கொண்டு சேர்க்கும்.
* ஆபத்தான விஷயங்களைக் கையாளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலையும் கண்ணும், கருத்துமாக கையாண்டால்தான் நன்மை உண்டாகும்.
* மனித வாழ்க்கை நிலையற்றது. நீண்டநாள் வாழ்வோம் என்ற மமதையில் கெட்டதையே செய்துகொண்டிருக்கிறீர்கள். தாமரையில் உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. இதை உணர்ந்து கொண்டு வாழ்ந்தால், கெட்டது செய்ய மனம் இடம் கொடுக்காது.
* கடவுளை நீங்கள் வணங்கும்போது, ""இறைவா!
அபாயங்களிலிருந்து என்னை பாதுகாத்திடு,'' என கெஞ்சாதீர்கள். ""அபாயங்களை எதிர்க்கக்கூடிய பயமற்ற தன்மையை எனக்கு கொடு,'' என வேண்டுங்கள். இத்தகைய பிரார்த்தனையைத்தான் இறைவனும் எதிர்பார்க்கிறார்.


பணம் எப்போது வரும்?

வழி சொல்கிறார் தாயுமானவர்
* உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால், மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்டவர்களின் பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என உங்கள் மனதிற்கு தோன்றுகிறதோ, அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
* மனம் சலிக்காமல் இறைவன் மீது பக்தி செலுத்துபவனுக்கு, வர வேண்டிய செல்வம் அனைத்தும் தானாகவே வந்து சேரும். அவனுக்கு பிள்ளைகளும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட நெருங்குவதற்கு தயக்கம் காட்டுவான். உடல் நலமும் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், ஞானமும் கைகூடும்.
* பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து, அடியில் இருக்கும் நல்ல தண்ணீர் கண்ணுக்குத்தெரியும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து, அதன்படி நடந்து கொண்டு நடநந்தால் அறிவு தெளிவடையும்.


பணக்கார குட்டிச்சுவர்கள்

வரிந்து கட்டுகிறார் வாரியார்
* சுருக்கெழுத்து தெரிந்தவனுக்கு அதிலுள்ள கருத்தைப் படிக்கமுடியும். மற்றவர்களுக்கு அது வெறும்
கோடாகவே தெரியும். அதுபோல, பக்தியுள்ளவனுக்கு கருவறையில் இருக்கும் சிலை கடவுளாகத் தெரியும்.
மற்றவர்கள் கண்ணுக்கு வெறும் சிலையாக மட்டுமே தெரியும்.
* எவ்வளவு பெரிய சுவராக இருந்தாலும் கூரை இல்லாவிட்டால் அது குட்டிச்சுவர்தான். அதுபோல எவ்வளவு பணம் இருந்தாலும் தர்மசிந்தனை இல்லாவிட்டால் அம்மனிதன், பயனில்லாத குட்டிச்சுவருக்கே ஒப்பானவன் ஆவான். ஒருவனுக்கு எந்தக் காலத்திலும் அவன் செய்த தர்மம் மட்டுமே துணையாக வரும்.
* "இவள் என் தாயே இல்லை' என்று வெறுப்பினால் மகன் தாயைப் பழித்தாலும், அவள் தன் பிள்ளையை வெறுப்பதில்லை. அதுபோல, கடவுள் இல்லை என்று பழித்தாலும், அவர் தன் பிள்ளைகளாகிய நமக்கு கருணை செய்ய மறப்பதில்லை.
* மரண சமயத்தில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதைப் பொறுத்தே அடுத்த பிறவி வாய்க்கும். எனவே, இளவயது முதலே பக்தி, ஜபம், தியானம் போன்ற நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டியது அவசியம்.
* பால் தரும் பசு நமக்கு சொந்தமானதுதான் என்றாலும், கன்றுக்குட்டி பக்கத்தில் இருந்தால் தான் அதனிடமிருந்து எளிதாக பாலைக் கறக்க முடியும். அதுபோல, இறைவன் நமக்கு அருள் தரும் உரிமை கொண்டவராக இருந்தாலும், அவரது அருள் பெற்ற அடியார்களின் துணையை நாடினால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.


பேராசை கூடவேகூடாது

சாடுகிறார் சாரதாதேவியார்
* மனிதப்பிறவி துன்பங்கள் நிறைந்ததுதான். இதற்காக எந்த துன்பத்தைக் கண்டும் பயப்பட வேண்டாம். துன்பத்தை தாங்கி, அதை சமாளிப்பவரே மனிதரில் சிறந்தவர் ஆவார். இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தால், துன்பங்களை பொறுத்துக் கொள்ளும் பக்குவம் தாமாகவே வந்துவிடும்.
* பணத்தின் மீது ஈடுபாடு கொண்டால் மனம் அழுக்காகிவிடும். பணம், பொருள் இவற்றில் நம் மனத்தைச் செலுத்தத் தொடங்கினால், வேறு திசையில் செல்லத் தொடங்கி விடுவோம். பேராசைக்காரர்களே! போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
* மனிதர்களிடம் அன்பு செலுத்தினால் அந்த அன்பினை அவர்கள் உதாசீனப்படுத்தலாம். ஆனால், ஆண்டவன் மீது அன்பு காட்டினால் அவன் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார். அதனால் எப்போதும் இன்பம் மட்டும் இருக்குமேயன்றி, துன்பம் இருக்காது.
* தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வது தான். ஆனாலும், தண்ணீர் மீது விழும் சூரியனின் கிரணங்கள், அத்தண்ணீரை வானத்திற்கு உயர்த்தி விடுகின்றன. இதைப்போலவே, தாழ்ந்த விஷயங்கள், போகப்பொருட்கள் இவற்றை நோக்கி மனிதன் கீழ்நோக்கிச் செல்கின்றான். ஆனால், இறைவனுடைய அருள் மனிதன் மீது விழும் போது, அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

சோம்பல் கூடவே கூடாது!

எச்சரிக்கிறார் திருவள்ளுவர்
* தண்ணீர் நிறைந்த குளத்தில் உள்ள மலரின் தண்டு, தண்ணீரின் ஆழத்திற்கேற்ப வளர்ந்து நிற்கும். அதுபோல, ஒருவரின் உயர்வு அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்ப இருக்கும்.
* சோம்பல் கூடவே கூடாது. யார் ஒருவர் சோம்பலுடன் இருக்கிறாரோ, அவருக்கு அதனாலேயே அழிவு உண்டாகும். அவரது குடும்பமும் அழிவைச் சந்தித்து சிதைந்து விடும்.
* தன்னிடம் உள்ள செல்வ வளத்தை, பிறருக்கு நன்மை செய்வதில் செலவிடுபவர்கள் உயர்ந்தோர் ஆவர்.
இத்தகைய குணமுள்ள நல்லவர்கள் வறுமையுடன் இருந்தால் அதுவேகொடுமையிலும் கொடுமையானதாகும். இதைவிட, தன்னிடம் உள்ள செல்வத்தால் பிறருக்கு தீங்கு செய்யும் கொடியவர்களிடம், பணம் இருந்தால் இன்னும் கொடுமையானது.
* ஒருவருக்கு, எதிரியால் மட்டும்தான் துன்பம் உண்டாக வேண்டுமென்பதில்லை. எதிரியை விட கொடுமையான துன்பம் தரக்கூடியது பொறாமை. இந்த குணம் கொண்டவன் அழிவானே தவிர, இம்மியளவு நன்மைகூட பெற முடியாது.
* இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு அனைத்து உயிர்களும் ஒன்றே. அனைத்து உயிர்களுக்கும் அருளும் இறைவனைப் போற்றி வழிபடுபவர்களுக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படாது.

No comments:

Post a Comment