Wednesday 15 April 2020

கற்றதை மற; சும்மா இரு!

கற்றதை மற; சும்மா இரு!




- 
தேதியூர் பாலு

ஜெர்மானிய வேதாந்தி பால் தேவ் ஸேன் சொல்கிறார்...

""நமக்கு எதிர்காலத்தைக் காணும் திறமை இல்லை. இடைவிடாது ஆராயும் மனிதனுடைய மனக்கண் முன் இன்னும் என்னென்ன அதிசயங் கள், என்னென்ன தெய்வீகக் காட்சி கள் தோன்றப் போகின்றன என்பதை நாம் கூற முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூறலாம். எந்தப் புதிய வழிகளை எதிர்காலத் தத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்தாலும் உப நிஷதங்கள் கூறும் "தத்வமஸி', "அஹம் பிரும்மாஸ்மி' என்னும் பேருண்மையை ஒரு நாளும் அசைக்க முடியாது. அதில் சிறிதேனும் மாறுதல் ஏற்படுத்த இயலாது. இவ்வுலக இயற்கையானது விடுவிக்க முடியாத ஒரு புதிர் போன்றது. நமது அறிவு வளர வளர இந்தப் புதிர் எவ்வளவு கடினமானது என்பதுதான் தெளிவுபடுகிறது. இதற்கு ஒரு விடை கண்டுபிடிக்க வேண்டு மானால் அதற்குரிய திறவுகோலை, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேட வேண்டும். அந்த இடம் நமது உள்ள மாகிய கோவில். அதைத் திறந்து பார்த்தால் இயற்கையின் ரகசியத்துக்கான திறவுகோலைக் காண முடியும். இங்குதான் முதன் முதலில் உபநிஷத ரிஷிகள் அதைக் கண்டுபிடித்து ஆத்மதரிசனம் பெற்று அழியாப் புகழ் அடைந்தனர்.''

நாம் குறியீடுகளுக்கே முதலிடம் தருகி றோம். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறதோ அதைப் புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம்.


ஒருவர் கதவை மூடிக்கொண்டு பூஜை செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் பூஜையை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர்.

எவரைக் குறித் துப் பூஜை செய்கி றோமோ அவரை விட்டுவிட்டு புற பூஜையைத்தான்- குறியீட்டு முழக்கத்தை தான் நிஜமாகக் கருதி உண்மையை மறக்கிறோம். வார்த்தைக்கு முக்கியத்துவம் தரும் நாம் வார்த்தை கள் உணர்த்தும் உண்மையை மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே நாம் சண்டை போடுகிறோம்.

புத்த பகவான் சொல்லும் ஒரு கதை...

ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது மடைமை.

தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது மடைமை. "வார்த்தைகள்' தெய்வத்தை உணர்வதற்கே... உணர்ந்தவுடன் வார்த்தைகள் இல்லாமல் இருக்கும் நிலையே சிறந்ததாகும்.

பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் நிறைய கற்றுள்ளேன். இல்லற ஞானம் பெற்றுள்ளேன். நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார்.

அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார்.

உணரும் வரைதான் பேச்சு, வார்த்தைகள். உணர்ந்தபின் பேச்சற்ற நிலை.

பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.''

"சும்மாயிரு சொல்லற' என்கிறார் அருணகிரி நாதர்.

சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான்.

அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார்.

""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான்.

""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர்.

ஒரு நாத்திகர் தலைவராக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் பெருமையை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, நாட்டுத் தலைவரிடம் வந்தார்.

தலைவர், ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார்.

""இறைவனின் மாண்பை'' என்றார் விஞ்ஞானி.

""என்னிடம் சொன்ன இறைமாண்பு பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நிரீச்வர வாதத்தை விதியாகக் கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த இறைவன் பற்றிய உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார்.

அந்த விஞ்ஞானியை ஒரு சமயப் பாதிரியார் சந்தித்தார்.

அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்குப் பாதிரியார், ""நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார்.

ஆகவே இறையுணர்வு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. புறத் தர்க்கத்தால்- புறத்தூண்டுதலால் ஏற்படுவதல்ல இறையுணர்வு.

ஒரு அருமையான கலைச்சின்னத்தை அதன் பெருமை தெரிந்த ஒருவர் இருபது வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய கலைச்சின்னத்தை வெறும் இருபது வெள்ளிக் காசுக்கு விற்று விட்டானே'' என்றான்.

இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு இருபது வெள்ளிக்காசு கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.

ஆக கொடுப்பவனின் மனப்பான்மை - வாங்குபவனின் மனப்பான்மையைப் பொருத் தது அதன் மதிப்பு!

எனவே, எல்லாரும் விழிப்புணர்வுடன் ஞானம் பெற்று விளங்குவதே சிறப்பு!

No comments:

Post a Comment