Wednesday, 15 April 2020

உருவ வழிபாடு

உருவ வழிபாடு



பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது.

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.

No comments:

Post a Comment