Friday 20 July 2012

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!




தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். அதிலும் பிரௌன் பிரட்டானது கம்பு அல்லது கோதுமையால் ஆனது. மேலும் அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே இது ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இந்த பிரௌன் பிரட்டை வாங்கும் போது நன்கு தரமானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் சில பிரௌன் பிரட்கள் செயற்கை வண்ணங்களாலும் பிரௌனாக நிறமூட்டப்பட்டிருக்கும். சரி, இப்போது அந்த பிரௌன் பிரட்டை சாப்பிட்டால் அப்படி என்ன உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்ப்போமா!!!

முழு தானியங்கள் : பிரௌன் பிரட்டை செய்யப் பயன்படுத்தப்படும் தானியங்கள் சுத்தகரிக்கப்படாதது என்பதால் அது பிரௌன் நிறத்தில் உள்ளது. மேலும் அதில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அதை செய்யப் பயன்படுத்தப்படும் தானியத்தில் இருக்கும் எந்த ஒரு பகுதியையும் நீக்காமல் தயாரிப்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். மேலும் அதில் வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை உண்டால் செரிமானமும் எளிதாக நடைபெறும். மேலும் இது டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். அதனால் உடலானது ஸ்லிம் ஆவதோடு, உடலுக்கு தேவையான அளவு மட்டும் கொழுப்புகளும் கிடைக்கும். ஆகவே ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க, இதனை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள் : சாதாரண பிரட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களை நிரப்புகின்றனர். ஆனால் அப்போது நார்ச்சத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால் இந்த பிரௌன் பிரட்டில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே போதிய அளவு பிரேளன் பிரட் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பதோடு, வயிற்றுக்கும் போதிய உணவு கிடைத்த நிம்மதியும் இருக்கும். மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் பராமரித்து வரும். அதுமட்டுமல்லாமல் இதனை உண்பதால் மாரடைப்பு ஏற்படுவதும் குறையும் என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலம் இந்த பிரௌன் பிரட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளும்.

பிரௌன் பிரட்டானது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் அதனை உண்ணும் போது அளவுக்க அதிகமாகவும் உண்ணக் கூடாது. ஏனென்றால் அதில் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே குறைந்த அளவு உண்டால் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கலாம். பிரௌன் பிரட் வெள்ளை பிரட்டை விட சுவையானது அல்ல தான், ஆனால் ஆரோக்கியமானது.

Sunday 1 July 2012

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?



என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது.
சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

சோம்பல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்!



மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று, புற்றுநோய். புற்றுநோய்க்கு முற்றும் தடை போட இன்னும் வழிபிறக்கவில்லை என்றபோதும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்று, உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை.
`புகையிலை, மது, புகை' போன்ற பழக்கங்களுக்கும் புற்றுநோயில் முக்கியப் பங்குண்டு என்பது நாம் அறிந்ததே. புற்று நோய் குறித்த `பகீர்' விவரங்கள் இங்கே.
 
செல்வ வளமை, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும். மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் இங்கும் கேன்சர் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டில் உலகளவில் சுமார் ஒன்றே கால் கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு வாக்கில் அப்படியே இரண்டு மடங்காகிவிடும் என்கிறார்கள்.
பதப்படுத்திய அல்லது துரித உணவால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடல் பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம். 2030-ல் இந்தியா, சீனாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்திருக்கும். புகைப்பதைக் குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந து நல்ல பலனைக் கொடுக்கும். முன்பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையைத் தொடங்குவது நல்லது. குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது, தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்று நோய் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிற போதிலும், புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது.
இந்தப் புற்று நோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் காணப்படும் புற்று நோய்களில் 40 சதவீதம், வசதியான வாழ்க்கை முறையை உடைய மேலைநாடுகளில்தான் காணப்படுகிறது.
உண்மையில் இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் 15 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நன்றாக வளர்ந்த நாடுகளில் மார்பகப் புற்று நோய், நுரையீரல், பெருங்குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
வளர்ச்சி அடையாத நாடுகளில் கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் காணப்டுகின்றன. மேற்கண்ட ஏழு வகை புற்று நோய்கள்தான் மொத்த புற்றுநோய்களில் 62 சதவீதமாக உள்ளன.