என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.
அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....
1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது.
சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.
2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.
3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.
4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.
5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.
மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.
என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?
No comments:
Post a Comment