Sunday, 1 July 2012

சோம்பல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்!



மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று, புற்றுநோய். புற்றுநோய்க்கு முற்றும் தடை போட இன்னும் வழிபிறக்கவில்லை என்றபோதும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதில் ஒன்று, உடல் அலுங்காத சோம்பல் வாழ்க்கை.
`புகையிலை, மது, புகை' போன்ற பழக்கங்களுக்கும் புற்றுநோயில் முக்கியப் பங்குண்டு என்பது நாம் அறிந்ததே. புற்று நோய் குறித்த `பகீர்' விவரங்கள் இங்கே.
 
செல்வ வளமை, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும். மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் இங்கும் கேன்சர் அபாயம் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டில் உலகளவில் சுமார் ஒன்றே கால் கோடியாக இருந்த புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டு வாக்கில் அப்படியே இரண்டு மடங்காகிவிடும் என்கிறார்கள்.
பதப்படுத்திய அல்லது துரித உணவால் ஏற்படும் உடல் பருமன், குறைவான உடல் பயிற்சி மற்றும் அதிகமான புகைப் பழக்கமே இதற்குக் காரணம். 2030-ல் இந்தியா, சீனாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்திருக்கும். புகைப்பதைக் குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந து நல்ல பலனைக் கொடுக்கும். முன்பரிசோதனை செய்து, உரிய சிகிச்சையைத் தொடங்குவது நல்லது. குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது, தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்று நோய் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிற போதிலும், புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது.
இந்தப் புற்று நோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் காணப்படும் புற்று நோய்களில் 40 சதவீதம், வசதியான வாழ்க்கை முறையை உடைய மேலைநாடுகளில்தான் காணப்படுகிறது.
உண்மையில் இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் 15 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நன்றாக வளர்ந்த நாடுகளில் மார்பகப் புற்று நோய், நுரையீரல், பெருங்குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
வளர்ச்சி அடையாத நாடுகளில் கழுத்து, இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் அதிகம் காணப்டுகின்றன. மேற்கண்ட ஏழு வகை புற்று நோய்கள்தான் மொத்த புற்றுநோய்களில் 62 சதவீதமாக உள்ளன.

No comments:

Post a Comment