Thursday 29 March 2012

இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ!



ஆவகேடோ பழம் சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சிறந்தது. இயற்கையிலே சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. ஆவகேடோவின் பழத்தின் அழகியல் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆரோக்கியமான சருமம்

ஆவகேடோவில் உயர்தர வைட்டமின் ஏ உள்ளது. சருமத்தின் இறந்த செல்களை போக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், குளுடோமின் சருமத்தினை ஆரோக்கியமாக மாற்றுகிறது. ஆவகேடோவில் வைட்டமின் இ அதிகம் அடங்கியுள்ளது. இது சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. வறண்ட சருமத்தை மென்மையாக்குவதில் ஆவகேடோ எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. ஆவகேடோ பேக் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ஸ் ஆக செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து இளமையை மீட்டெடுக்கிறது.

முகச்சுருக்கம் போகும்

முகச்சுருக்கத்தினால் வயதான தோற்றம் ஏற்படும். ஆவகேடோ இதனை போக்குகிறது. அதிகமான மேக் அப், ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனங்களை உபயோகிப்பதனால் முகச்சுருக்கம் ஏற்படும். இதனை இயற்கையான வழியில் ஆவகேடோ போக்குகிறது. ஆவகேடோ பழத்தை மசித்து அதில் பேஷியல் மாஸ்க் போல போடவும். 20 நிமிடம் கழித்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும், இதனால் சருமத்தில் தங்கியுள்ள எண்ணற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

முகம் பளபளப்பாகும்

ஆவகேடோ பழத்துடன் ஒரு வாழைப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் சேர்த்து நன்றாக கூழ் போல பிசைந்து முகம், கழுத்து மற்றும் வறண்ட சருமத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமத்தில் தழும்புகள், வடு குறைந்து வறண்ட சருமம் பளபளப்பாகும்.

ஆவகேடோ எண்ணெய் சில துளிகளை எடுத்து சருமத்தில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் ஊறவைத்து கழுவ சருமம் பளபளப்பாகும் .

பளபளக்கும் கூந்தல்

ஆவகேடோ சதையை எடுத்து அதனுடன் ஒரு முட்டையின் வெண்கருவை உடைத்து ஊற்றி கலக்கி சிறந்த கண்டிசனராக பயன்படுத்தலாம். இந்த கலவையை தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை தன்மை கிடைப்பதோடு வறண்ட சருமம் மிருதுவாகும். இதில் உள்ள வைட்டமின் இ கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

வெப்பக்கொப்புளங்கள்

கோடை காலத்தில் ஆவகேடோ எண்ணெய் இயற்கை சன்ஸ்கிரீன் லோசனாக செயல்படுகிறது. இது அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. வெப்பக் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ள இடத்தில் ஆவகேடோ எண்ணெய் பூச வலி குறையும். கொப்புளங்கள் குணமாகும்.

No comments:

Post a Comment