Friday, 8 June 2018

நடையை மிஞ்சிய மருந்தில்லை!

யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழி பழசு. ‘யானைக்கும் சுகர் வரும்’ என்பதுதான் புதுசு. வனவிலங்குகளில் நம்மைப் பிரமிக்க வைக்கிற யானைக்கும் உடற்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் வர ஆரம்பித்திருப்பதால், காட்டுயிர் மருத்துவ உலகம் ரொம்பவே கவலை கொண்டிருக்கிறது. குறிப்பாக, நம் ஊரில் கோயில் யானைகளுக்குப் பொங்கலும் பழமும் கொடுத்துக் கொடுத்து அவற்றை நீரிழிவுக்குள் சிக்க வைத்துவிட்டோம்.


விலங்குக் காட்சிச் சாலையில் உள்ள யானைகள் அதிகம் நடக்காமல், நமக்குக் காட்சிப்படுத்தப்படும் பொருளாகிப் போனதாலும் அதற்கும் நீரிழிவு வர ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் யானையின் ‘லெப்டின் ஹார்மோன்’, அது சுரக்கும் இன்சுலின் அளவு, அதன் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு, ‘கொஞ்சம் யானையை நடக்க விடுங்கப்பா’ எனக் கால்நடை மருத்துவர்களின் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
தன் இரைக்காக சாதாரணமாக 7-15 கி.மீ. தினசரி நடந்த யானை, எப்படிக் கோயில் வாசலிலும் வனவிலங்குக் காட்சிச் சாலையிலும் ‘தேமே’ என நிற்க வைக்கப்பட்டதால் அதற்குத் தொப்பையும் சுகரும் தொற்றிக்கொண்டதோ அதே சிக்கல்தான் மனிதனுக்கும். மோதகப் பிரியர் காட்டில் இருந்தாலும் சரி, நாட்டில் இருந்தாலும் சரி நடந்தாக வேண்டும்.
நடையே முதல் மருந்து
வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களும் கைபேசி ‘ஆப்’பில் வந்ததுவிட்டன. இதனால் நடை மிகவும் அந்நியப்பட்டுப்போனது. இன்றைக்கு நகர்ப்புறங்களில், மிகப் பெரிய அளவில் நீரிழிவு நோய் அதிகரித்தமைக்கு இதுதான் முக்கியக் காரணம்.
நீரிழிவை வராது தடுக்க வேண்டும் என்றாலும் சரி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது நீரிழிவால் வேறு உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி, மிக மிக முக்கியமான பயிற்சி நடைப்பயிற்சி மட்டுமே. நடைக்கு மாற்றாக உலகில் எந்த மருந்தும் இல்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த இரண்டு முதியவர்கள், நீரிழிவு நோயாளிகளிடம் நான் அடிக்கடி உதாரணம் காட்டும் நபர்கள். இருவரும் வெகு சமீபத்தில் தம் 92 – 93 வயதில் இயற்கை மரணமடைந்தார்கள். இருவரும் 45 – 50 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கொண்டிருந்தவர்கள். அவரவர் குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை மட்டும் எடுத்து வந்ததோடு, தினசரி 4 – 7 கி.மீ. அவர்கள் இருவரும் நடந்தார்கள். அந்த நடைப்பயிற்சியை இறுதிவரை அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் வாழ்க்கையை நலமாக நகர்த்த உதவியது நடைப்பயிற்சி மட்டும்தான் என்பதில் துளியும் ஐயமில்லை.
வியர்வையைக் கவனியுங்கள்!
தினசரி 4 – 5 கி.மீ. நடை, மிகச் சிறப்பு. காலையோ மாலையோ நடக்கலாம். நீரிழிவு நோயாளிகள் மாலையில் நடக்க நினைத்தால், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் ஆகியிருப்பது நலம். காலையிலும் சிறிய கோப்பைத் தேநீர் எடுத்துவிட்டு அல்லது சற்று ஆற்றல் தரும்படியான சிறு துண்டு கொய்யாவோ சர்க்கரை – மைதா சேர்க்காத தானிய பிஸ்கட்டோ சாப்பிட்டுவிட்டு 20 மணித்துளிக்குப் பின்னர் நடைப்பயிற்சிக்குப் போகலாம்.
காலுறை, காலில் காய்ப்பு ஏற்படுத்தாத காலணி அவசியம். உள்பக்கம் மென்மையாக உள்ள காலணி அணிய வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்குக் கால் பாதங்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதால் வெறும் காலில் நடைப்பயிற்சிக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
நடக்கும் 20 மணித்துளிகளுக்கு ஒருமுறை அரைக் கோப்பை நீர் அருந்துவது நலம். உடலில் நீர் குறையாமலிருப்பது நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய வியர்க்கும்பட்சத்தில் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். வியர்வை சாதாரண நடை வியர்வையா நீரிழிவால், ‘லோ சுகர்’ (தாழ் சர்க்கரை) காரணமாக வரும் வியர்வையா என்பதை உணர வேண்டும். தாழ் சர்க்கரை வியர்வையில், கூடவே மனக்குழப்பம், கிறுகிறுப்பு, வெலவெலப்பு ஏற்படும். இன்சுலின் போடுபவர்கள், ‘இது தாழ் சர்க்கரை நோய் வியர்வையா?’ என்பதை அறியாமலிருக்கக் கூடாது.
நடை என்பது தவம்
ஓட்டத்தைவிட, நடை கூடுதல் பயனளிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்காகச் சாலையில் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்வது மாதிரியான அன்ன நடை வேண்டாம். கைகளை வீசி நடப்பது நல்லது. சென்னைப் பூங்காக்களில் 8 போட்டு நடப்பது தற்போது பிரபலம். ‘யோகிகள், சித்தர்கள் அப்படி நடந்தார்கள்’ என இதைப் பற்றி பேச்சு உண்டு. எப்படியோ, நடந்தால் சரி.
பங்குச் சந்தை வீழ்ச்சி, சனிப் பெயர்ச்சி, மருமகள் செய்யும் அழிச்சாட்டியம், ‘அரசாங்கம் அப்படீன்னு ஒண்ணு இருக்கா என்ன?’ என்பது போன்ற பல விவாதங்களோடு, கும்பலாய் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். நடை ஒருவித தவம். மனதுக்கினிய பாடல்களைச் சில மணித்துளிகள் கேட்பதும், மனத்தின் எண்ணங்களை ஆகாயத்தில் பரவலாக்கும் விதமாக நினைவுகளைக் கொட்டித் தனியே நடப்பதும்தான் நடைப்பயிற்சியில் கூடுதல் பலனைத் தரும். நடைப்பயிற்சி கோபத்தைக் குறைக்கும். மூளையின் உடனடி துல்லிய செயல்திறனைக் கூட்டும்.
நடையில் நுண்ணிய புற ரத்த நாளங்களுக்கு ரத்தம் பீய்ச்சப்படுவதால், ‘மைக்ரோ வாஸ்குலர்’ பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுவதோடு கண்கள், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் வெகுவாகப் பாதுகாக்கப்படுகின்றன.
x

No comments:

Post a Comment