Thursday, 18 May 2017

நோய்களின் தாக்கத்தை குறைத்திடும் முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள்  இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.


 
 
தேவையான பொருட்கள்: 
 
முருங்கைக் கீரை - 4 கப் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
தண்ணீர் - 6 கப் 
உப்பு - தேவையான அளவு 
மிளகு - தேவையான அளவு 
எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க  வேண்டும். பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி  விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில்  முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி  இறக்கினால், முருங்கைக்கீரை சூப் தயார்.

Tuesday, 25 April 2017

வேண்டாமே பரோட்டா

மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான்.



வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து உண்ணத்தொடங்கினர். மாறியத் உலகம் உணவு உட்கொள்ளும் முறைகளும் மாறின. சுவைக்கு அடிமையான மனிதன் ஆரோக்கியம் பற்றி அறவே மறந்தான் என்பதே உண்மை. நா ருசிக்கு முதலிடம் அளித்த மனிதன் எவற்றையெல்லாம் உண்கிறான் என்று அறிந்துகொண்டால் வியப்பைவிட வேதனையே மிஞ்சும்.

மைதா என்ற மாவு இக்கால மனங்கவர் உணவு. அது எதிலிருந்து கிடைக்கிறது? தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு. கோதுமைத் தானியத்தை அரைத்துச் சலித்தால் வீணாகும் மாவு. இவைதான் மைதா. அதாவது மைய்ய அரைத்தமாவு மைதா.


முதலில் இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது, தெரியுமா? சுவரொட்டிகள் ஒட்டத்தான் முதலில் இது பயன்படுத்தப்பட்டது. இந்த மாவைத் தண்ணீருடன் கஞ்சியாகக் காய்ச்சினால் நல்ல பசை கிடைக்கும். இதனை சுவரொட்டிகள் பயன்படுத்தினர்.

பின் இந்த மாவை கேக், பிரெட், ரொட்டி பரோட்டா , நூடுல்ஸ் ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தினர். இவற்றில் ரொட்டி பரோட்டா நம்மை அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் எண்ணிப்பாருங்கள் இது மைதாப் பசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை உண்டால் இது செரிமானமாக பல நாள்களாகும். மேலும் குடலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையது .மேலும் மைதாவை உண்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. இதில் எள்ளளவும் நார் சத்து இல்லாததால் மலச்சிக்கலும் உண்டாகும். பிரெட் உண்பவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படுவது உண்டு.
நூல்டுல்ஸ் அதிகமாக சிறுவர்களால் விரும்பப்படும் ஓர் உணவு. இதுவும் மைதாவினால் தயாரிக்கப்படுவதே. இதுவும் மாவுச்சத்து மட்டும் கொண்டது.
மைதாவின் நிறம் வெள்ளை வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் அது வெளுக்க ஒரு வேதியல் பொருள் சேர்க்கப்படுவதுதான். துணி வெளுக்க குளோரின் ஊற்றுவது போல் மைதா மாவு வெளுக்க இராசயனப் பொருள் (பென்சோயில் பெராக்சைடு)  சேர்க்கப்படுகிறது. அது நம் வயிற்றையும் வெளுத்து அரித்துவிடும் தன்மையது. நாளடைவில் குடலில் அல்சர் நோய் ஏற்படக்கூடும் என்ற மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

மாவுப்பொருள்கள் எளிதில் செரிமானமாகிவிடும். அதனால் தான் நார் சத்து நிறைந்த பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்றும் அவை தெரிவிக்கின்றன. நார் சத்து நிறை உணவுகள் மெல்ல செரிமானம் ஆவதால் நீண்ட நேரம் நமக்குப் பசிக்காது.  அதனால்தான் உடைத்த தானியங்களையும் நார் சத்து நிறைந்த காய் பழங்களையும் உண்பது நன்று.
வெள்ளை அரிசி, வெள்ளைச்சீனி, வெள்ளை மாவு மூன்றும் நம்மை விரைவில் கொள்ளும் மும்மலங்கள்.

காந்தியடிகள் கூறிய தீட்டாத அரிசியும் வேர்கடலையும் வெல்லமும் நன்றே! மைதாவில் செய்யப்படும் பரோட்டா உங்களை புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை.

Thursday, 6 April 2017

இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா கற்றாழையில்?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக  வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
 

 
தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல்  போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
 
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை  மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.  எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும்  பயன் படுத்தப்படுகிறது. 
 
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை  எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை  துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு  பல நன்மைகளும் கிடைக்கும்.
 
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச்  சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு  படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
 
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு  போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில்  வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். 
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை  மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை; ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.




பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
 
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான  நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.
 
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
 
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி  தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
 
 
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை  சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட  மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்  சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

Sunday, 12 March 2017

தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து ஓமம்!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

 
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
 
மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
 
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
 
குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
 
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
 
* அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
 
* வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
 
* நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
 
* மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவ சரியாகும். பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
 
* வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
 
* ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு நிங்கும்.
 
* தொப்பையை குறைக்க தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

உடல் சூட்டை தணிப்பதோடு, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இளநீர்!

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர்  தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
 
 
 
காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’ போல்  ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையில் இருப்போர்க்கு  உயிர் தரும் மருந்தாகிறது. 
 
நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்தின் தாக்கத்தை குறைக்க  பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும்,  முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். 
 
இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது  அடங்கியுள்ளது.
 
தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக  அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. 
 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில்  உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. 
 
வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும  பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

Saturday, 11 March 2017

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.


வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. 
அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.
காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.
பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்திய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.
நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.



நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

 

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.


 
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.
 
வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில்  உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
 
இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு,  குடல்புண்ணையும் ஆற்றும்.
 
பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். இதனுடன் சர்க்கரை சேர்த்து  சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு.
 
படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால்  நினைவாற்றல் பெருகும்.
 
பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய்  விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும்.