Sunday 1 April 2012

ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!



உடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இவை குறைவாக இருந்தால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். இதனால் உடல் சோர்வடையும், முகம் வெளிறிப்போய்விடும்.

ரத்த சோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாக உள்ளது. ஊட்டச்சத்துள்ள, இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடாத காரணத்தினாலே பெரும்பாலோனோர் ரத்த சோகை நோய்க்கு பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் பாதிப்பு

ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை யினாலும் ரத்த சோகை உண்டாகும். ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும்.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.

கீரைகள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பழங்கள், தானியங்கள்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பீட்ரூட்

பீட்ரூட் காய்கறியில் உயர்தரை இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதோடு வைட்டமின் சி சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக்கொள்ளப்படும்.

மாமிசம், சிப்பி உணவு

இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment