Sunday, 1 April 2012

ஜங்க் ஃபுட் பதார்த்தங்களைத் தவிருங்கள்: மறுபடியும் ஒரு எச்சரிக்கை



இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பும் கொழுப்பும் இனிப்பும் அளவுக்கதிகமாக இருப்பதாகவும், இவற்றை அதிகம் உண்டால் இந்திய இளைஞர்களுக்கு பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

ஜங்க் ஃபுட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு தீங்கான உணவு வகைகளில், டிரான்ஸ்ஃபேட் என்று சொல்லப்படுகின்ற எளிதில் கெட்டக் கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிகிறது.
இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம் என்றும் இந்தியாவில் இவ்வகையான உணவு வகைகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தியுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பெருமளவில் வர்த்தகமாகும் முன்னணி உணவுப் பதார்த்தங்களில் காணப்படும் போஷாக்கு உள்ளடக்கங்களை அளந்து பார்த்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் CSE என்று சொல்லப்படும் செண்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்வயர்மெண்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேகீ நூடுல்ஸ், டாப் ராமென் நூடுல்ஸ், மெக்டொனால்ட்ஸ் பர்கர், கெண்டகி ஃபிரைட் சிக்கன் பொரித்த கொழி, ஹல்திராம் நிறுவனத்தின் ஆலு பூஜியா காரசேவு வகை, பெப்ஸி கோ நிறுவனத்தின் இடைத்தீனி பதார்த்தங்கள் போன்றவற்றின் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போஷாக்கு தகவல்களையும், அப்பொருட்களை பரிசோதனைக்கூடங்களில் ஆராய்ந்து பார்த்தபோது அதில் தெரியவந்த போஷாக்கு தகவல்களையும் இந்த அமைப்பினர் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அதிக கொழும்பும் அதிக உப்பும் அதிக இனிப்பும் கொண்ட உணவு வகைகளை உண்டால் உடல் நலத்துக்குத் தீங்கு என்ற பொதுவான தகவல் மக்களுக்குத் தெரிந்துள்ளது.

ஆனால் தாங்கள் பெரும்பான்மையாக உண்ணும் இம்மாதிரியான உணவுகளில் மோசமான வஸ்து எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதைப் பற்றியோ, அவற்றை உண்ணுவதால் தம்முடைய உடல் நலத்துக்கு எப்படியான பாதிப்பு நேர்கிறது என்பதை பற்றியோ மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்று CSE அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண் தெரிவித்துள்ளார்.

எப்படி பாதிப்பு நேர்கிறது?

ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் அவர் ஒரு நாளில் அதிகபட்சமாக எவ்வளவு கொழுப்பையும், உப்பையும், இனிப்பையும் உண்ணலாம் என்பதற்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜங்க் ஃபுட்டாக அமைந்துள்ள உணவுப் பதார்த்தங்களைக் கொஞ்சம் சாப்பிட்டாலே அதில் ஒருவர் ஒருநாளில் அதிகபட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டிய போஷாக்கில் பெரும்பான்மையானவை உடலில் சேர்ந்துவிடுகின்றன.

இவ்வாறாக உடலில் அளவுக்கதிகமாக சேரும் கொழும்பும், உப்பும், இனிப்பும் உடலில் படிந்து ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதாக அறிவியல் நமக்கு எடுத்துரைக்கிறது.

உணவுப் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியா?

உதாரணத்துக்கு ஆரோக்கியமாக வாழ ஒருவருக்கு ஒரு நாளில் ஆறு கிராம் உப்பு போதுமானது. ஆனால் மேகீ நூடுல்ஸ் ஒரு பாக்கெட் சாப்பிட்டாலே அதில் மூன்றரை கிராம் உப்பு இருக்கிறது. அதாவது நாம் ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பில் அறுபது சதவீதம் இந்த ஒரு பாக்கெட் நூடுல்ஸிலேயே இருக்கிறது. அதே நாளில் நாம் மற்ற மற்றப் பொருட்களையும் சாப்பிடும்போது உடலில் உப்பு கூடிப்போய் விடுகிறது. உப்புச் சத்து அதிகமானால் உடலில் இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிற ஆரம்பித்துவிடும்.

வர்த்தகப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள போஷாக்குத் தகவல்கள் போதுமான அளவில் இல்லை என்றும், சில வேளைகளில் உண்மைக்கு முரணாக இருப்பதாகவும் CSE தெரிவிக்கிறது.

ஹல்திராம்ஆலு பூஜியா காரசேவுப் பொட்டலத்தில் டிரான்ஸ்ஃபேட் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாலும், பரிசோதனை செய்து பார்த்தபோது நூறு கிராம் காரசேவில் இரண்டரை கிராம் கெட்ட கொழுப்பு இருக்கத்தான் செய்தது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மெக்டொனால்ட்ஸ் கடையில் குழந்தைகளுக்கான சிறிய சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கி ஒரு பிள்ளை உண்ணும்போது, ஒரு நாளில் அக்குழந்தைக்கு தேவைப்படும் உப்பில் தொண்ணூறு சதவீதம் அதிலேயே கிடைத்துவிடுகின்றது என்ற தகவலை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் எச்சரிப்பதில்லை இல்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் போன்ற விஷயங்கள் இந்தியாவில் மிக அதிகமாக இருந்துவரும் ஒரு சூழலில், இப்படியான உணவு வகைகளை இந்தியக் குழந்தைகள் அதிகம் சாப்பிட ஆரம்பித்தால், இளம் வயதிலேயே இவர்கள் நோய்வாய்ப்படும் ஆபத்து ஏற்படுகிறது என CSE அமைப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment