Friday, 19 December 2014

மயக்கத்தை நீக்கும் வேப்பெண்ணெய்!


வேப்பெண்ணெய் தமிழ்நாட்டில் மருத்துவத்தில் பலவிதத்தில் நிறைய உபயோகிக்கப்படுகிறது. மற்ற நாடுகளில் மிகவும் குறைவு. இந்த எண்ணெய்யில் இருக்கும் கடுமையான வாசனையை அனுசரித்து சூடான வீரியம் கொண்டதென்று சாமானியமாய் தோன்றலாம். ஆனால், இது அத்தனை கடுமையான உஷ்ண வீரியம் கொண்டதல்ல. ஏனென்றால், தலைக்கும் உடலுக்கும் வேப்பெண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு அதன் வாசனை  பல மணிநேரம் மூக்கைத் துளைக்குமே தவிர எண்ணெய் தேய்த்துக் கொண்டவருக்கு கண் பொங்கி உடல் எரிச்சல் உஷ்ணம் உண்டாவதில்லை. அதனால் கடுகெண்ணெய் அளவிற்கு வேப்பெண்ணெய் சூட்டை ஏற்படுத்துவதில்லை.

வேப்பெண்ணெய்யின் மருத்துவகுணங்கள்:

வெளிப்புறத் தேய்ப்பினாலும் உள்ளுக்குச் சாப்பிடுவதினாலும் கிருமிகள், குஷ்டநோய்கள், வாயு பித்தம் கபம் எனும் மூன்று தோஷங்களையும் போக்கும்.

சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல் அடைப்புகளை வெளிப்படுத்தும்.
கல்லீரலில் உண்டாகும் பித்தக் கல் அடைப்பையும் வெளிப்படுத்தலாம்.
குடலில் ஏற்படும் கிருமிகள், தலைமுடியில் வரும் பேன், ஈறுப்பூச்சிகள், வெட்டுக்காயம், நாட்பட்ட அழுகிய புண்கள், புண்களில் வரும் புழுக்கள் இவற்றை அடியுடன் அகற்றும்.

வேப்பெண்ணெய்யை உள்ளுக்குச் சாப்பிடுவதால் கள், சாராயம் மற்ற போதை வஸ்துக்கள், தூக்கமாத்திரைகள் இவைகளினால் ஏற்பட்ட மயக்கம், பயத்தினால் ஏற்பட்ட மயக்கம், அபதந்த்ரகம் எனும் சங்கை கோளாறு முதலியவற்றை நீக்கித் தெளிவை உண்டாக்கும்.

முட்டி மற்றும் இதர மூட்டுகளில் வாயு மற்றும் கபத்தினால் ஏற்படும் நீர் திரவக்கோர்வை, வீக்கம், வேதனைகளை வேப்பெண்ணெய்யின் ஒத்தடம் சீக்கிரமே குணமடையச் செய்யும்.

நாட்பட்ட தலைவலி, மண்டையிடி பாரம் எல்லாம் சில நாட்கள் தலையில் வேப்பெண்ணெய்யைத் தேய்ப்பதால் குணமாகும்.

காய்ச்சலுக்கும், காய்ச்சலில்லாமலும் கப வாயுவினால் மார்பில் சளி அதிகம் உறைந்து மூச்சுத் திணறலும் உள்ள கஷ்டநிலையில் மார்பைச் சுற்றிலும் சுட வைத்த வேப்பெண்ணெய்யைத் தடவி வறுத்த கொள்ளினால் ஒத்தடமிட உடனே கபம் இளகி உபாதை குறையும்.

ஏழு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அஜீர்ணத்தினால், கபவாத  ஜுர வேகத்தினால், வயிற்றில் நாக்குப் பூச்சியினால், மலச்சிக்கலினால், விஷவாயுவினால், திடீர் குளிர்காற்றுக்கு இலக்காவதால் மற்றும் ஏதாவது காரணத்தினால் திடீரென்று உண்டாகக் கூடிய உடலுதறல், வலிப்பு, இழுப்பு, மூச்சுத் திணறல் தொந்தரவுகளில் வேப்பெண்ணய் மிகவும் உபகாரமானது. உள்ளுக்குச் சாப்பிடக் கொஞ்சம் கொடுத்தல், மேலுக்குப் பூசி ஒத்தடம், ஆசனவாயில் எனிமா செய்தல் போன்றவற்றால் உடனடி பலனைத் தரும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் நல்லெண்ணெய்யை விட வேப்பெண்ணெய்யின் சூடான வீரியமானது வலிப்பு நோயை ஏற்படுத்தும் மூளையைச் சார்ந்த காரணிகளை விரைவாக அகற்றக்கூடிய தன்மை உடையதாகக் கருதலாம்.

வலிப்பு நோயில் உடல் மற்றும் மனதைச் சார்ந்த வாத பித்த கபம் மற்றும் ராஜசிக தாமஸிக தோஷங்களால் சூழப்பட்ட புத்தி, மனம், இதயம் இவற்றை இணைக்கக் கூடிய குழாய்களை, நன்றாக ஊடுருவிச் சென்று அவற்றை வெளிப்படுத்தும் வாந்தி எனும் சிகிச்சை முறையால் அக்குழாய்களை சுத்தம் செய்யவேண்டும். வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் வலிப்புநோயை வஸ்தி எனும் எனிமா சிகிச்சைமுறை பித்தத்தால் உண்டான வலிப்பை விரேசனம் எனும் பேதிமருந்து கொடுத்து செய்விக்கப்படும் சிகிச்சை, கபத்தால் உண்டான வலிப்பை வாந்தி சிகிச்சையை பிரயோகம் செய்தும் குணப்படுத்த வேண்டும். அதன் பிறகு உடலை வலுவூட்டும் கஞ்சிகளைக் கொடுத்து பஞ்சகவ்யக்ருதம் எனும் நெய்மருந்தை உள்ளுக்குச் சாப்பிடவேண்டும். மூளை மற்றும் இதயத்திலுள்ள குழாய்களை வலுவூட்டும் இந்த நெய்மருந்தால் வலிப்பு நோய் நன்றாக மட்டுப்படும்.

No comments:

Post a Comment